Skip to main content

“மரணமே உனக்குச் சிரிக்கத் தெரியாது; அதனால்தான், சிரிப்பை திருடிவிட்டாய்!” - கவிஞர் வைரமுத்து!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

Poet Vairamuthu addressed press after pay homage to vivek

 

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

 

அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்தும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு தனது துக்கத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், “ஒரு சீர்திருத்தக் கலைஞன் மறைந்துவிட்டான் என்று சொல்வதா? என்னைப் பொறுத்தவரையில், ஒரு நல்ல சகோதரனை இழந்துவிட்டேன். என் கவிதைகளின் கொள்கைப் பரப்புச் செயலாளரை நான் இழந்துவிட்டேன். தமிழ்த் திரை உலகம் நீண்ட காலமாக சேமித்துவைத்திருந்த செல்வத்தை இழந்துவிட்டது. நகைச்சுவை நடிகர்கள் வருவார்கள், இருக்கிறார்கள். அவர்களில், விவேக் தனித் தடம் பதித்தவர். கொள்கை, சீர்திருத்தம், பகுத்தறிவு ஆகியவை இருக்க வேண்டும் என்று கலையில் தன்னைச் செதுக்கிக் கொண்டவர். 

 

இன்றைக்கு சாவின் விழியில் அவரது மரணம் கொண்டாடப்படுவதற்கு காரணம், அவரது கலைச் சேவை மட்டுமல்ல; அதைத் தாண்டி, அவரது சமூக அக்கறை. ஒரு கலைஞனுக்குத் தேவையான சமூக அக்கறையைத் தன் கலை வழியிலும், கலைக்கு வெளியிலும் அவர் பின்பற்றினார் என்பதுதான் விவேக்கின் தனிச்சிறப்பு. ரசிகர்கள் மட்டுமா துக்கம் கொண்டாடுகிறார்கள். கலை உலகம் மட்டுமா துக்கம் கொண்டாடுகிறது. மனிதர்கள் மட்டுமா இன்று துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்? இல்லை. விவேக் நட்ட மரங்களும், செடிகளும், கன்றுகளும் விவேக்கிற்காக கண்ணீர் சிந்துகின்றன எனச் சொல்ல வேண்டும். 

 

Poet Vairamuthu addressed press after pay homage to vivek

 

எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. என் கவிதைகளை எழுத்துகளை, என்னை, திரையில், திரைக்கு வெளியில் கொண்டாடியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவரும் நானும் ஒரே வகுப்பில் யோகா பழகிக்கொண்டோம். ஓராண்டாக எனக்குப் பக்கத்தில் இருந்து அவர் யோகா கற்றுக்கொண்டார். இப்போது நான் தனியாக யோகா செய்கிறேன். என் பக்கத்து இடம் காலியாகிவிட்டது. நண்பர் விவேக் இவ்வளவு விரைவில், நம்மைவிட்டு போவார் என நான் கருதவில்லை. 

 

59 வயது என்பது இளமை கனிந்த வயது. இனிமேல்தான் ஒருவன் சேவை செய்ய வேண்டிய வயது. பக்குவப்பட்ட வயது. கலை புரிகிற வயது. சமூகத்தை அறிகிற வயது. இந்த வயதில், மரணம் அவரைப் பிரித்துக் கொண்டதில், எங்களுக்குச் சம்மதம் இல்லை. மரணமே உனக்குச் சிரிக்கத் தெரியாது. அதனால்தான், சிரிப்பைத் திருடிவிட்டாய். விவேக்கை கலைச் சரித்திரம் எப்படி எழுதும் என்று நான் நனைக்கிறேன், ‘விவேக்’ என்று பெயரைப் போட்டு, எதிர்கால கலைச் சரித்திரம், ‘காமெடி கதாநாயகன்’ எனக் கொண்டாடும். நீண்ட காலம் நினைக்கப்படுவார் என் அன்பு சகோதரர் விவேக்” என்று தெரிவித்தார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

விவேக்கின் நினைவு தினம் - மரக்கன்றுகள் நட்டு நடிகர்கள் அஞ்சலி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Vivek's Memorial Day Actors vaibhav cell murugan Tribute Planting trees

'சின்னக் கலைவாணர்' என ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் விவேக், தமிழ் திரைத்துறையில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்த அவலங்களைத் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிப்பைத் தாண்டி பல லட்ச மரக்கன்றுகளைத் தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார். 

இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக விவேக் மரணம் அடைந்தார். இவரது மறைவு  ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவையொட்டி பலரும் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டனர். இது அவ்வப்போது நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் நடந்த விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினி திருமணத்தில் கூட மணமக்கள் மரக்கன்றுகள் நட்டனர். மேலும் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினர். 

இந்த நிலையில் இன்று (17.04.2024) விவேக்கின் மூன்றாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் தொடர்பான நினைவுகளைப் பதிவாகப் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே விவேக்கின் மேலாளராகவும், நடிகராகவும் வலம் வந்த செல் முருகன் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் வைபவ் ஆகிய இருவரும் விவேக்கின் 3ஆவது நினைவு தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர்.