/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramadoss-in_4.jpg)
தமிழ் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி.ரா. எனும், கி. ராஜநாராயணன் உடல்நலக் குறைவின் காரணமாக நேற்று (17.05.2021) இரவு காலமானார். அவருக்கு வயது 98. இவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்களும், எழுத்தாளர்களும், அவரது வாசகர்களும் மிகுந்த வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அதேபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் கி.ரா. மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், “கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ரா எனப்படும் கி. இராஜநாராயணன் உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த கி. இராஜநாராயணன், தாம் பிறந்து வாழ்ந்த கரிசல் வட்டாரத்து மக்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வெற்றிகள் ஆகியவற்றையும் கதைகளாக வடிக்கத் தொடங்கினார். தமிழ் இலக்கிய உலகின் ஆகச் சிறந்த கதை சொல்லியாக திகழ்ந்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார். நாட்டார் வழக்கில் அழிந்துவரும் சொற்களைத் தேடித்தேடி கதைகள், கவிதைகள், கட்டுரைகளில் சேர்க்க வேண்டும் என்று எழுத்தாளர்களை அறிவுறுத்திவந்தார்.
மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்காதவரான கி.ரா, தமது இலக்கிய ஆளுமையால் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணியாற்றினார். அவர் எழுதிய ‘கோபல்லபுரத்து மக்கள்’என்ற நாவல் உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த நாவலுக்காக 1991ஆம் ஆண்டு கி.ராவுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இலக்கிய சிந்தனை விருது, தமிழ் இலக்கிய சாதனை விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர்.
கி.ரா.வுக்கு அடுத்த மாதம் 99வது வயது பிறக்கிறது. நூற்றாண்டு கொண்டாடுவார் என அனைவரும் எதிர்நோக்கியிருந்த நேரத்தில் அவர் மறைந்திருப்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. மண்ணைவிட்டு மறைந்தாலும் தமது படைப்புகளால் நமது மனங்களில் எப்போதும் அவர் வாழ்ந்துகொண்டிருப்பார். கி.ரா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், வாசகர்கள், இலக்கிய வட்டத்தினர்உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)