Skip to main content

 மக்கள்நலப் பணிகள் முடக்கம்: தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்! ராமதாஸ்

Published on 21/04/2019 | Edited on 21/04/2019

 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:   ‘’தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. ஆனாலும், வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 23-ஆம் தேதி தான் நடைபெறவிருக்கிறது என்பதால் தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் நாளான மே மாதம் 27-ஆம் தேதி வரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ra

 

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதன் அடிப்படை நோக்கமே அரசின் செயல்பாடுகள் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத் தான். நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலைப் பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். 

 

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வாக்குப்பதிவு முடிவடையும் வரை இத்தகைய கட்டுப்பாடுகள்  இருப்பதில் தவறில்லை. ஒருவகையில் பார்த்தால் இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியமானவையும் கூட. ஆனால், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் இந்தக் கட்டுப்பாடுகள் அவசியமா? என்பது தான் இப்போதைய வினாவாகும். மக்களவைத் தேர்தல் அட்டவணை மார்ச் 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின் கடந்த 43 நாட்களாக நடத்தை விதிகள் காரணமாக மக்கள் நலப்பணிகள் எதையும் மேற்கொள்ள முடியவில்லை. அதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. தலைநகர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த வேண்டும். ஆனால், அதற்கு தேர்தல் நடத்தை விதிகள் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது பெரும் சிக்கலாகக் கூடும்.

 

தமிழ்நாட்டில் வறட்சி, கஜா புயல் உள்ளிட்ட பாதிப்புகளாலும், வறுமையாலும் வாடும் மக்களுக்கு ஒருமுறை நிதியுதவியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்ட போதிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் புகார் மனு அடிப்படையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி இந்தத் திட்டம் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களின் துயரத்தை சரியான நேரத்தில் துடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் திட்டமே உருவாக்கப்பட்டது. ஆனால், பெரும்பான்மையான மக்களுக்கு சென்றடையும் முன்பாகவே, தமிழக அரசின் ரூ.2000 நிதி வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 

அதேபோல், உழவர்களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வழங்கும் மத்திய அரசின் திட்டமும் முடக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின்படி தமிழக விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வீதம் இரு தவணைகள்  வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இன்னும் ஒரு தவணை கூட வழங்கப்படவில்லை. இவை அனைத்துக்கும் காரணம் தேர்தல் நடத்தை விதிகள் தான். தேர்தல் நடைமுறை நிறைவடைய இன்னும் 37 நாட்கள் உள்ளன. அதுவரை ஏழை, எளிய மக்களுக்கும் உழவர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய உதவிகளை நிறுத்தி வைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

 

அரசின் உதவிகள் காலத்தினால் செய்யப்படுபவையாக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளால் தொடங்கப்பட்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிதி உதவித் திட்டங்களை இன்னும் 37 நாட்கள் கழித்து வழங்குவது பயனளிக்காது. எனவே, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடத்தை விதிகளை தளர்த்தி மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவித் திட்டங்களையும், மக்களுக்குத் தேவையான மற்ற நலத்திட்டப் பணிகளையும் செயல்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். தமிழக அரசும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத வேண்டும்.’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

சுதாரித்த எடப்பாடி! - மூட் அவுட்டான தினகரன்!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

alert edappadi palanisamy - Mood out Dinakaran

 

தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கான தேதி நேற்று (26.02.2021) மாலை அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்கி, மார்ச் 19- ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் பரபரப்பாகியுள்ளன.

 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மற்ற அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு கூட்டணியை இறுதி செய்யும் வேலையில் தீவிர முனைப்புடன் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் இறங்கியுள்ளன. அந்தவகையில், காங்கிரசுடன் திமுக தனது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. அதேபோல், அதிமுகவும் பாஜகவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார்.

 

இந்தநிலையில், பெங்களூருவில் இருந்து சென்னை வந்துள்ள சசிகலா அமைதியாகக் காய்களை நகர்த்திவருவதாகச் சொல்லப்பட்டது. கடந்த, 24-ஆம் தேதி அன்று சரத்குமார், சீமான், அமீர், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் சசிகலாவை சந்தித்தனர். இதுவெறும், மரியாதை நிமித்தாமண சந்திப்பென்றே சொல்லப்பட்டது. ஆனால், இந்தச் சந்திப்பின் பின்னணியில் அரசியல் கணக்குகள் இருப்பதாக சில அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்தனர். இந்தநிலையில், நேற்று திடீரென அதிமுக கூட்டணியில் அங்கம்வகித்த சமக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்து அதிமுக தலைமைக்கு ஷாக் கொடுத்தார். அடுத்த சில மணி நேரங்களில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த ஐ.ஜே.கே.-வின் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் சமகவின் தலைவர் சரத்குமார் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "சமக மற்றும் ஐ.ஜே.கே. ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். கூட்டணியின் பெயர் குறித்து விரைவில் அறிவிப்போம்" எனத் தெரிவித்தனர். 

 

இதற்கிடையில், சமீபத்தில் நடந்துமுடிந்த அமமுக பொதுக்குழுவில், 'தினகரனை முதல்வர் ஆக்க அயராது பாடுபட வேண்டும்' என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வாக்கு வங்கி அதிகம் உள்ள கட்சியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தினகரன் அறிவித்தார். இதனால், சுதாரித்த எடப்பாடி பழனிசாமி, தனது முதல் அசைன்மென்ட்டாக பாமகவிடம் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணியை ஒருவழியாக இறுதி செய்துவிட்டார். 'உள்இடஒதுக்கீட்டை வழங்கியதால்தான் குறைவான தொகுதிக்கு ஒப்புக்கொண்டோம்' என அன்புமணியே அறிவித்துள்ளார். இதன்மூலம், தொகுதிப்பங்கீட்டில் பாமக திருப்தியாக உள்ளதாகவே தெரிகிறது. அதேசமயம், சமகவை அதிமுகவிடம் இருந்து பிரித்தது போலவே பாமகவையும் பிரிக்க நினைத்த தினகரன் தரப்பு கடும் ஏமாற்றத்தில் உள்ளது. 

 

 

 

Next Story

நீலிக்கண்ணீர் வடிப்பதே மு.க. ஸ்டாலினுக்கு வாடிக்கையாகி விட்டது- ராமதாஸ்    

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

திமுக தலைவர் ஸ்டாலின்  டுவிட்டரில் ''தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2081 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளது என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியும், அந்தப் பணத்தை வசூல் செய்யாமல், ரூ.250 கோடியாக குறைக்கும் 'பேரம்' நடப்பதாக செய்தி! அமைச்சரவை அப்படி முடிவு எடுத்திருந்தால், அதற்கான அரசாணை ஏதும் வெளியிடாமல் நிறுத்த வேண்டும்.'' என்று தெரிவித்திருந்தார். ஸ்டாலினின் இந்த பதிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிப்பதே வாடிக்கையாகிவிட்டது என விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 

 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மட்டைப்பந்து திடலுக்காக தமிழ்நாடு மட்டைப்பந்து சங்கம் செலுத்த  வேண்டிய குத்தகை பாக்கி ரூ.2081 கோடியை ரூ.250 கோடியாக குறைப்பதற்கு தமிழக அரசு பேரம் நடத்துவதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது புகாரின் உண்மைத் தன்மை ஒருபுறமிருக்க, இவ்விவகாரத்தில் 2000-ஆவது ஆண்டு முதல் ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு  வரப்பட வேண்டும்.

சேப்பாக்கத்தில் மட்டைப்பந்து திடல் அமைந்துள்ள 7.52 லட்சம் சதுர அடி பரப்பளவுள்ள நிலம் 1936-ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் கிரிக்கெட் சங்கத்துக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த குத்தகை ஒப்பந்தம் பின்னர் 1965-ஆம் ஆண்டில் 30 ஆண்டுகளுக்கும், 1995-ஆம் ஆண்டில் 20 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. 1995-ஆம் ஆண்டு வரை மிகக்குறைந்த தொகைக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்ட நிலையில், 1995-ஆம் ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தில் நிலத்தின் சந்தை மதிப்புக்கு ஏற்ற வகையில், அதற்கான குத்தகை தொகையை உயர்த்துவதற்கு வகை செய்யப்பட்டது.

 

pmk Ramadas report

 

அதன்படி, 1995 முதல் 2000-ஆவது ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ஏற்கனவே வசூலிக்கப் பட்ட தொகையான ரூ.50 ஆயிரம் குத்தகையாக வசூலிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 2000-ஆவது ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும்,  ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை குத்தகைத் தொகையை அரசு நிர்ணயிக்கும் என்றும்   ஒப்பந்தத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2000-ஆவது ஆண்டில் மட்டைப்பந்து திடல் நிலத்துக்கான வாடகையை அரசு நிர்ணயித்திருந்திருக்க வேண்டும். குத்தகை தொகையை நிர்ணயிப்பது கடினமான பணி அல்ல. அரசு நிலம் வணிகப் பயன்பாட்டுக்காக குத்தகைக்கு விடப்பட்டு இருந்தால், அந்த நிலத்தின் சந்தை மதிப்பின் இரு மடங்கில் 7 விழுக்காட்டை ஆண்டு குத்தகையாக வசூலிக்க வேண்டும் என்பது தான் வருவாய்த்துறை வகுத்துள்ள விதியாகும். அதன்படி மட்டைப்பந்து திடல் நிலத்துக்கான குத்தகை தொகையை தமிழக அரசு மிகவும் எளிதாக வகுத்திருக்க முடியும்.

ஆனால், 2000-ஆவது ஆண்டில் தமிழக அரசு அவ்வாறு செய்யவில்லை. அப்போது தமிழ்நாட்டை ஆண்டது யார்? என்பது இப்போது சர்ச்சை எழுப்பியுள்ள ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். 2001-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, 2004-ஆம் ஆண்டில் வருவாய்த்துறை விதிகளின்படி மட்டைப்பந்து திடலுக்கான குத்தகையை நிர்ணயித்தது. 2000-ஆவது ஆண்டு முதல் 22.98 கோடி குத்தகை தர வேண்டும் என்று தமிழ்நாடு மட்டைப்பந்து சங்கத்துக்கு அரசு அறிவிக்கை அனுப்பியது. ஆனால், அதை மட்டைப்பந்து சங்கம் ஏற்க மறுத்த நிலையில்,  குத்தகை குறித்த சிக்கல் நீடித்தது.

2006-ஆம் ஆண்டுடன் இரண்டாவது குத்தகை நீடிப்பு காலமும் முடிவடைந்த நிலையில், மட்டைப்பந்து திடலுக்கான குத்தகைத் தொகையை, சந்தை நிலவரப்படி நிர்ணயிக்கக் கோரி 2007-ஆம் ஆண்டில் வருவாய்த் துறை அமைச்சருக்கும், வருவாய்த்துறை செயலாளருக்கும் நில நிர்வாக ஆணையர்  கோப்பு அனுப்பினார். அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு  எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, நில நிர்வாக ஆணையரின் கோப்பை கிடப்பில் போட்டது.

அடுத்த சில மாதங்களில் மட்டைப்பந்து திடல் நிலத்திற்கு குத்தகை நிர்ணயிக்க வேண்டும் என்று வருவாய்த்துறை செயலாளருக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் கோப்பு அனுப்பினார். அதனடிப்படையில்  வருவாய்த்துறை செயலாளர் மேற்கொண்ட நடவடிக்கை வினோதமானது. மட்டைப்பந்து திடலுக்கு குத்தகை தொகையை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை வருவாய்த்துறை தெளிவாக வகுத்துள்ளது. அதன்படி குத்தகைத் தொகையை தமிழக அரசு மிகவும் எளிதாக வரையறுத்திருக்க முடியும். ஆனால்,  வருவாய்த்துறை செயலாளர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, மட்டைப்பந்து திடலுக்கு நியாயமான வாடகை நிர்ணயிக்க அதிகாரிகள் குழு ஒன்றை வருவாய்த்துறை செயலாளர் அமைத்தார். அந்தக் குழு அடுத்த ஆட்சி மாற்றம் நடக்கும் வரை மட்டைப்பந்து திடலுக்கு குத்தகை நிர்ணயிக்கவில்லை.2007-ஆம் ஆண்டில் எந்தக் கட்சி ஆட்சி நடந்தது? என்பதை நான் சொல்லி அறிய வேண்டியதில்லை.

 

tt

 

2011-ஆம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழ்நாடு மட்டைப்பந்து சங்கம் செலுத்த வேண்டிய குத்தகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர், 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நில நிர்வாக ஆணையருக்கு கோப்பு அனுப்பினார். அதனடிப்படையில் தான் மட்டைப்பந்து வாரியம் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை  ரூ.1,834.78 கோடி குத்தகை பாக்கி செலுத்த வேண்டும் என்று அறிவித்ததுடன், அதை வசூலிக்க நடவடிக்கையும் மேற்கொண்டார். ஆனால், அதை செலுத்தாத மட்டைப்பந்து சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனிடையே, 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 திசம்பர் வரையிலான குத்தகைத் தொகை ரூ.246.30 கோடி சேர்த்து மொத்தம் ரூ.2081 கோடி குத்தகை பாக்கி வசூலிக்கப் பட வேண்டும் என்று இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.

சேப்பாக்கம் திடல் குத்தகை குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விஷயத்தில் நீதிமன்றம் தான் இறுதி முடிவு எடுக்க முடியும். ஆனால், 2000&ஆவது ஆண்டு  முதல் அந்த நிலத்திற்கான குத்தகையை நிர்ணயிக்காமலும், வசூலிக்காமலும் தாமதப்படுத்தி வந்தது திமுக அரசு, குத்தகையை நிர்ணயித்து வசூலிக்க நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசு என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால், தங்களின் தவறுகளை எல்லாம் மறைத்து விட்டு, இந்த விஷயத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். மீத்தேன் வாயு திட்டங்களுக்கு அனுமதி அளித்தது, நீட் தேர்வை கொண்டு வந்தது, ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கொண்டு வந்தது, பெட்ரோக் கெமிக்கல் முதலீட்டு மண்டலத்துக்கு அனுமதி அளித்தது, காவிரி நீர் சிக்கலில் துரோகம் செய்தது, கச்சத்தீவை தாரை வார்த்தது என தமிழகத்தின் நலன்களுக்கு அனைத்து வகையிலும் துரோகங்களை இழைத்து விட்டு, பின்னர் அதற்கான பழியை பிறர்மீது போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மு.க. ஸ்டாலினுக்கு வாடிக்கையாகி விட்டது. இது என்ன வகையான அரசியல்? என்பது தான் புரியவில்லை.

சென்னை சேப்பாக்கம் மட்டைப்பந்து திடலுக்கான குத்தகையை நிர்ணயிப்பதில் கடந்த 2000-ஆவது ஆண்டிலிருந்து இப்போது வரை திட்டமிட்டு இழைக்கப்பட்ட துரோகங்கள் எவை எவை?, அதற்கு காரணமானவர்கள் யார்? என்பதை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டியது அவசியம் ஆகும். அதற்காக இது குறித்து  விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என கூறியுள்ளார்.