Skip to main content

தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளியாருக்கு வேலை :பெ. மணியரசன் கண்டனம்

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விடுத்துள்ள கண்டன அறிக்கை:   ‘’தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இல்லாத முன்னுரிமை வெளிமாநிலத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு பணிகள் மட்டுமின்றி தமிழக அரசுப் பணிகளும் வெளிமாநிலத்தவர்களுக்கே வழங்கப்படுகிறது.

 

இந்த நிலையில் தான் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 300 உதவிப் பொறியாளர் நியமனம் செய்யப்பட்டு 29 ந் தேதி 5 பேருக்கு நியமன ஆணை வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த 300 பேரில் 39 பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தில் பொறியியல் படித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

 

ப்


இது குறித்து தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறும் போது..  
தொடர்ந்து தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்கள் தொகை தொகையாகக் குடியேறிக் கொண்டுள்ளார்கள். தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, இந்திக்காரர்களுக்கும் வெளி மாநிலத்தவருக்குமே 100 விழுக்காடு – 95 விழுக்காடு என வேலை தருகிறார்கள். தமிழர்கள் தங்கள் தாயகத்திலேயே வாழ்வுரிமை இழந்து அகதியாகும் அபாயம் அதிகரித்து வருகிறது.


 
இந்த அநீதியை எதிர்த்து நடுவண் அரசுப் பணிகளில் 90 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை தர வேண்டுமென்று நாம் போராடி வருகிறோம். கடந்த 03.05.2019 அன்று திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த போராட்டமும், #தமிழக வேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils சமூக வலைத்தளப் பரப்புரையும்  அனைத்திந்திய அளவில் இதுகுறித்த விழிப்புணர்ச்சியை உண்டாக்கியது.


 
இந்தக் கொடுமைகள் ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு அரசே இந்திக்காரர்களையும், வெளி மாநிலத்தவர்களையும் வேலையில் அமர்த்தியிருக்கும் தமிழினத்துரோகம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


 
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 300 - “உதவிப் பொறியாளர்” (Assitant Engineers) பணிக்குத் தேர்வானவர்கள் பட்டியல் நேற்று (29.05.2019) வெளியானது. அதில் 39 பேர் ஆந்திரா, கேரளா, உ.பி., பீகார், கர்நாடகம், ராஜஸ்தான், தில்லி, சத்தீசுகர் ஆகிய வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பணியமர்த்தல் ஆணையில் அவர்களது முகவரியும் இருக்கிறது. இதில் 25 பேர் ஆந்திரத்தெலுங்கர்கள். இவர்களை வடசென்னை, குந்தா (நீலகிரி), காடம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியில் அமர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாத ஊதியம் 50,000 ரூபாய் நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

 

p


 
தேர்வானோரின் பட்டியலை வெளியிட்டுள்ள மின்வாரியத் தலைமைப் பொறியாளர் அசோக் குமார், தேர்வானோரில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பின் அவர்கள் உடனடியாகத் தமிழ்த் தேர்வுக்குத் தயாராக வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் எனத் தெரிந்தே இவர்களை பணியில் அமர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு! (Letter No. 036904/G.13/ G.131/2019, dated 29.05.2019.)


கடந்த 2016ஆம் ஆண்டு (01.09.2016), தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட “தமிழ்நாடு அரசுப் பணியாளர் முறைப்படுத்தல் சட்ட”த்தின்படி, வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி பாக்கித்தான், நேப்பாளம், வங்கதேசம், மியான்மர், தான்சானியா, எத்தியோப்பியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தோரும் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் பிற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே அரசு மற்றும் தனியார் வேலைகள் என சட்டங்கள் உள்ள நிலையில், வெளிநாட்டவர் கூட அரசுப் பணியில் சேரலாம் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இச்சட்டம் காரணமாகவே, தமிழ்நாடு அரசுப் பணியில் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி நாட்டவர் சேர வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


 
இந்தியாவிலேயே அதிகளவிலான பொறியாளர்களைக் கொண்ட தமிழ்நாட்டில், சற்றொப்ப 1 கோடி பேர் வேலையில்லாமல் தவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசு – அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவரை பணியமர்த்துவது, தமிழ் மக்களுக்கு இழைக்கும் இனத்துரோகமாகும்!


 
இந்திய அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள மொழிவழி மாநிலமாகிய தமிழ்நாட்டில், தமிழர்களைப் புறக்கணித்து சகட்டுமேனிக்கு வெளி மாநிலத்தவர்களையும், வெளி நாட்டவர்களையும் வேலைக்குச் சேர்ப்பது சட்டவிரோதச் செயலாகும். மற்ற மாநிலங்களில் மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் 100க்கு 100 மண்ணின் மக்களுக்கே வேலை எனச் சட்டங்கள் இயற்றிச் செயல்படுத்தி வருகிறார்கள். அதுபோன்ற சட்டம் தமிழ்நாட்டில் இயற்றப்பட வேண்டும்.


 
தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100% வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள நடுவண் அரசுப் பணிகளிலும், தனியார் துறையிலும் 90% பணிகளை தமிழர் களுக்கே வழங்க வேண்டும், 10% மேல் பணியிலுள்ள வெளி மாநிலத்தவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.


 
தமிழ்நாடு மின் வாரியத்தின் உதவிப் பொறியாளருக்கான பணியமர்த்தல் பட்டியலில் உள்ள 39 வெளி மாநிலத்தவரை உடனடியாக நீக்க வேண்டும். நேற்று (29.05.2019) தேர்வானவர்களில் 5 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் பணிய மர்த்தல் ஆணை வழங்கியுள்ளார். அந்த ஐந்து பேரில் வெளி மாநிலத்தவர் இருந்தால், உடனடியாக அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். வேலை ஆணை கொடுத்திருந்தால் அதை இரத்து செய்ய வேண்டும்.


 
இல்லையேல், தமிழ்த்தேசியப் பேரியக்கம் அரசமைப்புச் சட்டப்படி மண்ணின் மக்களுக்கு வேலை கோரியும், வெளி மாநிலத்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை இரத்து செய்ய வலியுறுத்தியும் விரிவான போராட்டங்களை முன்னெடுக்கும் என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொய் வழக்கைக் கைவிட வேண்டும்! - பெ.மணியரசன் முதலமைச்சருக்கு கோரிக்கை!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

 P. Maniyarasan's request to the Chief Minister

 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறக்கையில்..

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் என்ற தனியார் சாராய உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தித் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான மகளிர் ஆயத்தில் உள்ள பெண்கள் 14.05.2019 அன்று அந்த ஆலை முன் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்கள்.

 

1. தமிழ்நாட்டில் முழு மது விலக்கைச் செயல்படுத்த வேண்டும்; 

 

2. கால்ஸ் டிஸ்ட்டிலரீஸ் (KALS Distileries Pvt. Ltd.) என்ற சாராய உற்பத்தி ஆலை கல்லாக்கோட்டையில் நிறுவப்பட்ட பின் அது அன்றாடம் மிகமிக அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி, சாராய உற்பத்திக்குப் பயன்படுத்துவதால், கல்லாக்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள 10 கிராமங்களிலும் நிலத்தடி நீர் மிக மிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் ஆழ்குழாய் மூலம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்து வந்த உழவர்களுக்கு நிலத்தடி நீர் வற்றி, நிலங்களைத் தரிசாகப் போட்டுள்ளார்கள்.  

 

3. நிலத்தடி நீர் வற்றியதால் – அவ்வூரில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு அரசு வேளாண் பண்ணையை மூடி விட்டார்கள்.



இக்காரணங்களை முன்வைத்து கால்ஸ் சாராய ஆலையை மூட வலியுறுத்தி மகளிர் ஆயம் பெண்கள் 14.05.2019 அன்று காலை 10.30 மணி அளவில் கல்லாக்கோட்டை கடைத்தெருவிலிருந்து மகளிர் ஆயம் தலைவர் ம.இலட்சுமி அம்மாள் தலைமையில் ஊர்வலமாகச் சாலை ஓரத்தில் சென்றார்கள். மேற்படி சாராய ஆலை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள நிலையில், கந்தர்வகோட்டைக் காவல்துறையினர் வழிமறித்து அனைத்துப் பெண்களையும் கைது செய்துள்ளதாக அறிவித்து, காவல் ஊர்திகளில் ஏற்றிச் சென்று கந்தர்வகோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள். அன்று மாலை 6 மணிக்கு அனைவரையும் விடுதலை செய்தார்கள்.

முன்தடுப்புச் சட்டப் பிரிவு 151 Cr.P.C இன் கீழ், அனைவரையும் கைது செய்து – மாலையில் விடுவித்துவிட்டார்கள். ஆனால், இப்போது ஓர் ஆண்டு ஐந்து மாதங்களுக்குப் பின் அப்பெண்கள் மீது கந்தர்வகோட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றத்தில் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143, 341 ஆகியவற்றின் கீழ் வழக்கு இருப்பதாகவும், அனைவரும் 14.10.2020 அன்று நீதி மன்றத்தில் நேர்நிற்க வேண்டும் என்றும் நீதிமன்ற அழைப்பாணை (Summons) 13 பெண்களுக்கும் இரு ஆண்களுக்கும் வந்துள்ளது.

முன்தடுப்பு நடவடிக்கையாகத் தடுத்து மண்டபத்தில் வைத்த பின், அப்பெண்கள் மேற்படி ஆலை வாயிலில் சட்ட விரோதமாகக் கூடினார்கள் என்றும், சட்டவிரோதமாக மறியலில் ஈடுபட்டார்கள் என்றும் காவல்துறை கூறுவது உண்மைக்கு மாறானது. நான் சொல்வது சரியானதுதானா என்று அறிய தாங்கள் தனி விசாரணை செய்து உண்மையை அறியலாம்.

தனியார் ஆலை நிர்வாகத்திற்குச் சாதகமாக நடக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கந்தர்வகோட்டை காவல்துறையினர், உயரிய காந்திய இலட்சியத்துடன் மதுவிலக்கு கோரிய பெண்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் பொய்வழக்குப் பதிந்துள்ளார்கள்.

 

Ad


இந்தக் கொடிய கரோனா காலத்தில் பெண்களை நீதிமன்றத்தில் நேர்நிற்க அழைப்பாணை அனுப்புவது அறமா என்று அவர்கள் சிந்திக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு மேற்படி வழக்கைக் கைவிடச் செய்வதுடன், கரோனா காலத்தில் தஞ்சை மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் பெண்களை அலையவிடாமல் காக்குமாறு கனிவுடன்  கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

 

 

Next Story

காவிரி மீட்பு வெற்றி விழாவா? - பெ. மணியரசன் கேள்வி

Published on 18/06/2018 | Edited on 18/06/2018

காவிரி மீட்பு வெற்றி விழாவா? என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்” என்ற தலைப்பில், இன்று மாலை மயிலாடுதுறையில், ஆளும் அ.தி.மு.க. மாபெரும் கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

 

கடந்த 09.06.2018 அன்றுதான், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இவ்வாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்க முடியாது – எனவே, நிலத்தடி நீர் பாசனத்தை ஊக்கப்படுத்த மின்சாரம் வழங்கப்படும் என்றும், மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ஊக்கம் தரப்படும் என்றும் அறிவித்தார். ஒன்பது நாட்களுக்குள் காவிரியில் எந்த உரிமையை மீட்டார்? என்ன வெற்றி கண்டார்? எதற்காக “வெற்றி விழா”?

உச்ச நீதிமன்றம் 31.06.2018க்குள், காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திட காலவரம்பிட்டு இறுதித் தீர்ப்பு வழங்கி விட்டது. ஆனால், இந்திய அரசு இதுவரை மேலாண்மை ஆணையம் அமைக்கவில்லை.



நடுவண் நீர் வளத்துறையின் வேறொரு பிரிவில் தலைவராக உள்ள மசூத் உசேன் என்பவரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பொறுப்புத் தலைவராக அமர்த்திவிட்டு, ஒதுங்கிக் கொண்டது மோடி அரசு! நடுவண் அரசு அமர்த்த வெண்டிய இரண்டு முழு நேர உறுப்பினர்கள் – இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள், மற்றும் ஒரு செயலாளர் ஆகியோரை மோடி அரசு அமர்த்தாமல், தமிழ்நாட்டுக்கு எதிராக இனப்பாகுபாட்டு அரசியல் நடத்தி வருகிறது!
 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்குரிய தலா ஒரு பிரதிநிதியை ஆணையத்திற்கு நியமித்துவிட்டார்கள். கர்நாடகம் மட்டும் தனது பிரதிநிதியை நியமிக்கவில்லை! கர்நாடகம் தனது பிரதிநிதியை நியமிக்காததால், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு தடை ஒன்றுமில்லை! காவிரி ஆணையத்தின் சட்டதிட்டப்படி அதன் செயலாளருக்கு மட்டும் ஓட்டுரிமை இல்லை! எஞ்சிய ஒன்பது பேர் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். மேலாண்மை ஆணையத்தில் ஒன்று அல்லது இரண்டு மாநிலப் பிரதிநிதிகள் வராவிட்டாலும், தடை இல்லை!


 

Cauvery rescue victory




குறைந்தபட்ச வருகையாக (கோரம்) மொத்தமுள்ள ஒன்பது பேரில் ஆறு பேர் வந்திருந்தால், கூட்டம் நடத்தலாம். எனவே, இப்பொழுது கர்நாடகப் பிரதிநிதி இல்லை என்பதால், மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் அரசு அமர்த்த வேண்டிய உறுப்பினர்களை அமர்த்தாமல் இருப்பதும், ஆணையக் கூட்டத்தை நடத்தாமல் இருப்பதும் திட்டமிட்டு தமிழ்நாட்டைப் பழிவாங்குகிறது என்பதற்குரிய சான்றாகும்! நடுவண் அரசின் இந்தப் பழிவாங்கலுக்கு, துணை போகிறது எடப்பாடி அரசு! காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட நடுவண் அரசுக்கு எடப்பாடி அரசு அழுத்தம் கொடுத்து, இந்நேரம் அதில் வெற்றி பெற்று, சூன் மாதத்திற்குரிய 9 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து திறந்து விடப்பட்டிருந்தால், ஆளுங்கட்சி “வெற்றி விழா” கொண்டாடலாம்!
 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி உரிமை மீட்பில் தனது தோல்வியைத் தானே ஒத்துக் கொள்ளும் வகையில், குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அறிவித்துவிட்டு, இப்பொழுது “காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழா” நடத்துவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது!

அடுத்து, மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் தேங்கினால்தான் குறுவைக்குத் திறக்க முடியும் என்று பழைய நிலையில் இன்றும் பேசுவது சரியல்ல! மேலாண்மை ஆணையம் சூன் மாதத்திற்கு 9 டி.எம்.சி.யும், சூலை மாதத்திற்கு 30 டி.எம்.சி.யும், அதைப்போல் ஆகத்து மாதத்திற்கு உரிய தண்ணீரையும் திறந்துவிட வேண்டும்! அதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு! எனவே, உடனடியாக மேலாண்மை ஆணையத்தை நடுவண் அரசு அமைக்கச் செய்து, மாதவாரியாக கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெறும் உரிமையை செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், இன்னும் சில நாட்களில் குறுவைக்குத் தண்ணீர் திறக்க முடியும்!
 

கர்நாடகத்தின் நான்கு அணைகளில் கபிணி, ஏமாவதி, ஏரங்கி அணைகள் நிரம்பிவிட்டன. கே.ஆர்.சாகரும் நிரம்பப் போகிறது. மாதவாரியாகத் திறந்துவிட, இதற்கு மேல் கர்நாடகத்திற்கு தண்ணீர் தேவை என்ன இருக்கிறது? தமிழ்நாடு முதலமைச்சர் இதைச் செயல்படுத்தி வைக்க, உருப்படியான நடவடிக்கை எடுத்தால், அவர் கேட்காமலே மக்கள் அவரைப் பாராட்டுவார்கள்! இதையெல்லாம் செய்யாமல், மேட்டூர் அணையைக் காயப்போட்டுவிட்டு, ஆற்று நீர்ப் பாசனக் குறுவையை கைவிடச் சொல்லிவிட்டு, போலி வெற்றி விழா கொண்டாடினால், அதை ஏற்றுக் கொள்ள இன்று மக்கள் தயாராக இல்லை என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.