Skip to main content

“பெருங்களத்தூர் - செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தைக் கைவிடக் கூடாது” - ராமதாஸ்

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Perungalathur - Chengalpattu flyover project should not be abandoned says Ramadoss

பெருங்களத்தூர் - செங்கல்பட்டு  பறக்கும் சாலைத் திட்டத்தைக் கைவிடக் கூடாது என பா.ம.க.  நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையைத்  தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன்  தயாரிக்கப்பட்ட  பெருங்களத்தூர் - செங்கல்பட்டு இடையே  27 கி.மீ நீளத்திற்கு  6 வழி  பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட   இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு மாற்றாக வேறு திட்டத்தைச் செயல்படுத்த நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருந்தாலும் கூட, அதனால் எதிர்பார்த்த பயன் கிடைக்காது.

ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன்  சென்னை முதல் செங்கல்பட்டு வரை  பறக்கும் சாலை அமைக்க வேண்டும் என்று பல பத்தாண்டுகளாகப் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகள், நிழல் நிதிநிலை அறிக்கைகள் ஆகியவற்றிலும் கூட இத்திட்டம் குறித்துத்  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வளர்ச்சி சார்ந்த இத்திட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவும்  உள்ளது.

பறக்கும் சாலைத் திட்டத்தின் தேவையைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் ஏற்றுக் கொண்டு, அதைச் செயல்படுத்த வசதியாகத் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான சாலையை 8 வழிச் சாலையாக்க திட்டம் வகுக்கப்பட்டு, அதில் தாம்பரம் - செட்டிப்புனியம் வரையிலான 23 கி.மீ நீளச் சாலை  எட்டுவழியாக விரிவுபடுத்தப்பட்டு விட்டது. அதன் மீது பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரை 6 வழி  பறக்கும் சாலை அமைக்கப்பட்டால், அதில் வாகனங்கள் நிற்காமல் செல்ல முடியும் என்பதால், போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும்  என்பது தான் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

ஆனால்,  பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ.3523 கோடி செலவாகும் என்றும், இவ்வளவு செலவில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதற்காகப்  பறக்கும் சாலையைப் பயன்படுத்துவோரிடமிருந்து அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டியிருக்கும்  என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிடத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்  தீர்மானித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.  இதற்கு மாற்றாக கிளாம்பாக்கம் முதல் பொத்தேரி வரை 7 கி.மீ தொலைவுக்கு மட்டும்  பறக்கும் சாலை அமைக்கவும்,  மறைமலை நகர், ஃபோர்டு மகிழுந்து ஆலை, சிங்கப்பெருமாள் கோயில், மகிந்திரா சிட்டி ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைக்கவும் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. இது எதிர்பார்த்த பயனை அளிக்காது.

ஜி.எஸ்.டி சாலையில் ஒவ்வொரு நாளும் ஒன்றரைக் கோடி வாகனங்கள் பயணிக்கின்றன.  விடுமுறை நாள்களில்  பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கும் போதும்,  சென்னைக்குத் திரும்பும் போதும் இந்த எண்ணிக்கை 50%  வரை அதிகரிக்கிறது. அத்தகைய தருணங்களில் செங்கல்பட்டு முதல் சென்னை வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.  இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில்,  எதிர்காலத்திலும்  போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க  பறக்கும் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்துவது தான் ஒரே தீர்வாக இருக்கும்.

சாலைகள் தான் நாட்டின் வளர்ச்சிக்கான பாதைகள் ஆகும்.  சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு  திட்டங்களைச் செயல்படுத்துவதில்  திட்ட மதிப்பீடு என்பது ஒரு தடையாக இருக்கக் கூடாது.  பெருங்களத்தூர் - செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் கிடைக்கும்  வளர்ச்சி மற்றும் பொருளாதாரப் பயன்களுடன் ஒப்பிடும் போது, அத்திட்டத்திற்கான செலவு என்பது மிகவும் குறைவு தான். இதைக் கருத்தில்  கொண்டு  பெருங்களத்தூர் - செங்கல்பட்டு  பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும். அதற்கான செலவை  மத்திய , மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'செல்லூர் ராஜு சொன்னது உண்மை; எடப்பாடிக்கு தான் புத்தி வரவேண்டும்'-புகழேந்தி பேட்டி

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
'What Sellur Raju said is true; "Edappadi should come to his senses" - Pugahendi interview

காமராஜர் பிறந்தநாள் ஜூலை 15 தேதியான இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஓசூரில் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் புகழேந்தி காமராஜர் சிலைக்கு மரியாதை செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ''குழந்தைகளுக்கான இலவச உணவு திட்டத்தை அமுல்படுத்தி, இலவச கல்வியை தோற்றுவித்த ஏழை பங்காளனாக, கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரராக விளங்கியவர் காமராஜர். அவருடைய பிறந்தநாளை இன்றைய தினம் நான் இங்கே உள்ள நிர்வாகிகளோடு கொண்டாடி உள்ளேன். அதிமுகவில் ஒற்றுமை வரவேண்டும் என்பது மனதார வரவேண்டும் வாயிலேயே பேசிக்கொண்டு இருந்தால் ஆகாது. கூப்பிட்டு சேர்த்து வைத்து விடுவேன் என்று ஒருவரும்; எந்த தியாகமும் செய்ய தயார் என்று இன்னொருவரும்; முடியவே முடியாது என்று இன்னொருவரும்; கட்சி நாசமாக போகட்டும் என நினைக்கும் பழனிசாமியும் என இப்படிப்பட்ட நிலைப்பாடுகள் மாற வேண்டும்.

எல்லோரும் ஒருங்கிணைந்தால் தான் அதிமுக காப்பாற்றப்படும் என்பது என்னுடைய கருத்து அல்ல தொண்டர்கள், பொதுமக்கள் கருத்து. அதற்கு வழி வகுக்க வேண்டும். அதற்கு தான் பாடுபடுகிறோம். இதில் சரியாக வரவில்லை என்றால் மக்கள் மத்தியில் அவர்கள் யார் என்பதை தோலுரித்துக் காட்டுவதற்கு இந்த ஒருங்கிணைப்பு குழு தயங்காது. மனதார காமராஜர் பிறந்தநாளில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மதுரையில் இருந்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். என்ன தெரியுமா சொல்லி இருக்கிறார் 'நாங்கள் என்ன காமராஜரா? நாங்கள் என்ன எம்.ஜி.ஆரா? நாங்கள் என்ன ஜெயலலிதாவா? கூவி கூவி ஓட்டு கேட்டாலும் போட மாட்டேன் என்கிறார்கள். அதனால் தான் மூன்றாவது இடத்துக்கு போய்விட்டோம். மதுரை அதிமுகவின் கோட்டையாக இருந்தது. கூவி கூவி ஓட்டு கேட்டும் ஓட்டு போடவில்லையே' என்று செல்லூர் ராஜூ சொல்கிறார்.

அப்பொழுது அவருடைய தலைமை யார்? அவர் தலைமையாக ஏற்றுக் கொண்டிருப்பவர் பழனிசாமி. இப்பொழுதாவது பழனிசாமிக்கு புரியுமா? செல்லூர் ராஜு சொன்னது உண்மை. சென்ற மாதம் ராகுல் காந்தியை பாராட்டினார் மனதார வரவேற்றோம். இப்பொழுது இன்னொரு உண்மையை சொல்லி விட்டார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூவி கூவி ஓட்டு கேட்டாலும் 'தூ..' என துப்பி விட்டு போகிறார்களே தவிர ஓட்டு போட மாட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக செல்லூர் ராஜு சொல்லி இருக்கிறார். இனி பழனிசாமிக்கு தான் புத்தி வரவேண்டும். தோற்றுப் போனதற்கு அவர் காரணம் சொல்ல வேண்டும். ஜெயலலிதா சொல்லுவார் இந்த தோல்வியை நானே ஒப்புக்கொள்கிறேன். இந்த தோல்வியை நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வார். கலைஞர் கடிதம் எழுதுவார் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் என்று. ஆனால் எடப்பாடி பழனிசாமி உட்கார்ந்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறாராம். உன்னால் தான் அதிமுக தோற்றே போய்விட்டது. இதில் என்ன ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி செய்த தப்புக்கு யார் ஆய்வு செய்வது. செல்லூர் ராஜு உண்மையை சொல்லி உள்ளார் பாராட்டுகிறோம். ஏன் சி.வி.சண்முகம் இன்னும் அமைதியாக இருக்கிறார். நான் எதிர்பார்த்தது நியாயம், தைரியம் எல்லாம் சி.வி.சண்முகம் இடத்தில் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த தைரியம் எங்கோ ஒரு மதுரை மண்ணிலிருந்து வருகிறது. ஏன் விழுப்புரம் மண்ணில் இருந்தது வரவில்லை என்பது தான் எனக்கு புரியவில்லை'' என்றார்.

Next Story

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு-வெளியான முழு விவரங்கள்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Electricity tariff hike in Tamil Nadu – Full details released

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜீரோ முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 4.60 காசுகள் இருந்த கட்டணம் ரூ.4.80 காசுகளாக உயர்ந்துள்ளது. 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.15 காசுகள் இருந்த கட்டணம் ரூ. 6.45 காசுகளாக உயர்ந்துள்ளது. 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 8.15 காசுகள் இருந்த கட்டணம் ரூ. 8.55 காசுகளாக உயர்ந்துள்ளது. 601 முதல் 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 9.20 காசுகளாக இருந்த கட்டணம், ரூ. 9.65 காசுகளாக உயர்ந்துள்ளது.

801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 10.20 காசுகளாக இருந்த கட்டணம் ரூபாய் 10.70 காசுகளாக உயர்ந்துள்ளது. 1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11.25 காசுகளாக இருந்த கட்டணம், 11 ரூபாய் 80 காசுகளாக உயர்ந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் 15 காசுகளில் இருந்து 8 ரூபாய் 55 காசுகளாக அதிகரித்துள்ளது. கிராமப்புற குடிசை வீடுகளுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 9 ரூபாய் 35 காசுகளில் இருந்து 9 ரூபாய் 80 காசுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, ராணுவ வீரர் குடியிருப்புக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் 15 காசுகளில் இருந்து 8 ரூபாய் 55 காசுகளாக உயர்ந்துள்ளது.

ஐம்பது யூனிட்டுக்கு மேல் வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட் 9 ரூபாய் 70 காசுகளில் இருந்து 10 ரூபாய் 15 காசுகளாக உயர்ந்துள்ளது. புதிய மின் இணைப்பு பெறுவோருக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. குடிசை மற்றும் குறு நிறுவன மின்கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் 95 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. விசைத்தறிகளுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 7 ரூபாய் 65 காசுகளில் இருந்து 8 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழில், ஐடி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 7 ரூபாய் 65 காசுகளிலிருந்து எட்டு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வேளாண், அரசு விதை பண்ணைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாய் 60 பைசாவிலிருந்து காசுகளில் இருந்து, 4 ரூபாய் 80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு 8 ரூபாய் 70 காசுகளிலிருந்து 9 ரூபாய் 10 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ஒரு கிலோ  வாட்டுக்கு 7 ரூபாய் 65 காசுகளில் இருந்து 8 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு கல்வி நிறுவனம், மருத்துவமனைகளுக்கான மின் கட்டணம் 7 ரூபாய் 15 காசுகளில் இருந்து 7 ரூபாய் 50 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கான மின்சார கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு 12 ரூபாய் 25 காசுகளில் இருந்து 12 ரூபாய் 85 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கோடி நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ள டான்ஜெட்கோ, 200 யூனிட் வரை 63 லட்சம் பேருக்கு மாதம் ஐந்து ரூபாய் மட்டுமே மின் கட்டணம் உயர்ந்துள்ளது. 200-ல் இருந்து 300 யூனிட் வரை 35 லட்சம் பேருக்கு மாதம் 15 ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்ந்துள்ளது. 300 இருந்து 400 யூனிட் வரை 25 லட்சம் பேருக்கு மாதம் 25 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது. 400 முதல் 500 யூனிட் வரை 13 லட்சம் பேருக்கு மாதம் 40 ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்ந்துள்ளது எனவும் அறிவித்துள்ளது.