Skip to main content

கோவில் திருவிழாவில் சக சாமியாடி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய நபர்

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

A person who pours boiling oil on the Samiyadi at a temple festival

 

கோவில் திருவிழாவில் சாமியாடி ஒருவர் உடன் ஆடிய மற்றொரு பெண் சாமியாடியின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பணிக்கன் குடியிருப்பைச் சேர்ந்தவர் பால்தங்கம். 48 வயதான பால்தங்கத்திற்குச் சொந்தமான குடும்பக் கோவில் அதே பகுதியில் உள்ளது. குடும்பக் கோவிலான பிரம்ம சக்தி அம்மன் கோவிலில் கடந்த சில ஆண்டுகளாகக் கொடைவிழா நடைபெற்று வருகிறது.

 

கொடைவிழாவில் பால்தங்கம் சாமியாடி மக்களுக்கு அருள்வாக்கு சொல்லுவதாகவும் கூறப்படும் நிலையில் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் பிரம்ம சக்தி அம்மன் கோவில் கொடை விழாவில் சாமியாடியுள்ளார். இதற்கு கோவில் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பினை தெரிவிக்க இது வாக்குவாதமாக மாறியுள்ளது.

 

இந்நிலையில் நேற்று நடந்த கோவில் கொடை விழாவில் கோவிலுக்குச் சென்ற விஜயன் மீண்டும் சாமி ஆடியுள்ளார். கோவிலில் பலகாரம் சுடப்பட்டுக்கொண்டிருந்த இடத்திற்கு சாமி ஆடியபடி வந்த விஜயன் கொதிக்கும் எண்ணெய்யில் கை விட்டு பலகாரங்களை எடுத்து மக்களுக்குக் கொடுத்துள்ளார். அதே சமயத்தில் பால்தங்கத்தையும் எண்ணெய்யில் கைவிட்டு பலகாரத்தை எடுத்து கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு பால்தங்கம் மறுக்கவே ஆத்திரம் அடைந்த விஜயன் கொதிக்கும் எண்ணெய்யை பால்தங்கத்தின் மேல் ஊற்றியதாகக் கூறப்படுகிறது.

 

A person who pours boiling oil on the Samiyadi at a temple festival
மாதிரி படம்

 

கொதிக்கும் எண்ணெய் பட்டதில் பால்தங்கத்தின் கைகள், முகம், கழுத்து என பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த மக்கள் பால்தங்கத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது தனியார் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் பால்தங்கம் சிகிச்சை பெற்று வருகிறார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுசீந்திரம் காவல்துறையினர் விஜயனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  அதே சமயத்தில் பால்தங்கத்தின் உறவினர்கள் விஜயன் முன்விரோதம் காரணமாகத்தான் இவ்வாறு செய்தார் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.