
காசிமேடு மீன்பிடித் துறைமுகம் போலீசாருக்கு, காசிமேடு பகுதியில் போதைப் பொருள் விற்பனை நடப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, போலீசார் சிங்காரவேலன் தலைமையிலான காவல்துறையினர், காசிமேடு சப்வே அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, காவல்துறையினர் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தி அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், மெத்தகுனோன் என்ற போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து விற்பனைக்காக போதைப் பொருள் வைத்திருந்த காசிமேடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (எ) வெள்ளை சூர்யா(21) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 600 கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சூர்யாவிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட சூர்யா மீன்பிடித் துறைமுகம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும் இவர் மீது 2 கொலை வழக்குகள் உட்பட 12 வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.