/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kodanadu-estate-name-board-art_4.jpg)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு சொந்தமாக கோடநாட்டில் எஸ்டேட் ஒன்று உள்ளது. இதில் அனுமதியின்றி கட்டடம் கட்டப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க வேண்டும் எனக் கூறி கோத்தகிரி ஊராட்சி மன்றத்தலைவர் பொன்தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருந்தார். இதனை எதிர்த்து கோடநாடு எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது உயர் நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், கோடநாடு எஸ்டேட்டில் விதியை மீறி எந்தக் கட்டடமும் கட்டப்படவிலை என்றும், கோத்தகிரி ஊராட்சி மன்றத்தலைவர் பிறப்பித்த நோட்டீஸையும் ரத்து செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து கோத்தகிரி ஊராட்சி மன்றத்தலைவர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hc-art-1_6.jpg)
இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரகுருபன் முன்னிலையில் இன்று (07.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர் வாதிடுகையில், “சொத்து வரி விதிப்பதற்கு மட்டுமே கோடநாடு எஸ்டேட் உள்ளே நுழைய அனுமதி கேட்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் கோடநாடு எஸ்டேட் உள்ளே யாரும் நுழைய முடியாத நிலை உள்ளது. கூடுதல் கட்டுமான பணிகள் மேற்கொண்டிருந்தால் எப்படி கண்டு பிடிப்பது. கொடநாடு எஸ்டேட் உள்ளே சென்று ஆய்வு செய்தால்தானே அதன் விவரங்களைத்தெரிந்துகொள்ள முடியும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு சசிகலா தரப்பு மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதிடுகையில், “2023 ஆம் ஆண்டு வரை சொத்து வரி செலுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளவில்லை எனத்தனி நீதிபதிகள் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஆய்வு செய்தால்தானே விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா எனத் தெரியவரும். ஆய்வு செய்ய ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு சசிகலா தரப்பு வழக்கறிஞர், “அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கு ஆட்சி மாற்றத்திற்கு பின் ஆய்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/judgement--art-file_44.jpg)
இதனைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், “கோடநாடு எஸ்டேட் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளது. உரிய விதிமுறைகளைப் பின்பற்றி ஆய்வு செய்யலாம். ஆய்வின் போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது” என உத்தரவிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)