
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன். பின்னர் புதுக்கோட்டையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அகழாய்வு செய்யப்படும் சங்ககால கோட்டைப் பகுதியான பொற்பனைக்கோட்டைக்கு மாவட்டச் செயலாளர் கவிவர்மன் மற்றும் பொற்பனைக்கோட்டை நீர்வாவிக்குளத்தில் முதன்முதலில் கி.பி. 2ஆம் நூற்றாண்டு கல்வெட்டைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்திய புதுகை பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் சங்கர், டைஃபி நகரத் தலைவர் விக்கி, தமுஎகச மாவட்டச் செயலாளர் சு. மதியழகன் ஆகியோருடன் அகழாய்வு நடக்கும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
அகழாய்வு இயக்குநர் முனைவர் இனியன் உட்பட அகழாய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்ளிடம் பேசும்போது, “பொற்பனைக்கோட்டையில் சங்ககால மக்கள் பயன்படுத்திய செங்கல், பானை ஓடுகள் கிடைத்துள்ளது. கீழடியில் அகழாய்வில் கிடைத்துள்ள சான்றுகள் சிந்துசமவெளி நாகரிகத்தோடு ஒத்துப்போகிறது. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு உள்பட பல இடங்களில் இந்திய, தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு செய்து பண்டைய தமிழர்களின் வாழ்க்கை நாகரிகத்தை வெளிக்கொண்டுவருகிறது. அதேபோல பொற்பனைக்கோட்டை அகழாய்வுக்குத் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் துணைவேந்தர் பார்த்தசாரதி, துறைத்தலைவர் தனலெட்சுமியின் முழு ஒத்துழைப்போடு முனைவர் இனியனை இயக்குநராகக் கொண்டு முதன்முறையாக அகழாய்வு பணியை தொடங்கியுள்ளது.

இதற்காக ரூ. 1 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் சிறிய அளவில் அகழாய்வு பணிகள் நடக்கிறது. இந்த நிதி போதுமானது இல்லை. அதனால் கூடுதல் நிதி வழங்க வேண்டும். மேலும், தொடர்ந்து அகழாய்வு பணிகள் தொய்வின்றி நடப்பதற்கு உடனடியாக கூடுதல் கால நீட்டிப்பும் செய்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் சங்ககால மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரத்தை வெளிக்கொண்டுவர முடியும். இதற்காக இந்திய, தமிழக தொல்லியல் துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்” என்றார்.