/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4785.jpg)
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று ஆளுநரைச் சந்தித்து பல கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “காவிரியில் தமிழ்நாட்டிற்கு வேண்டிய உரிமையை பெற்றுத் தருவதற்கு மத்திய அரசு உடனடியாக செவி சாய்த்து, நமது விவசாயிகளுக்கு வேண்டிய உரிமைகளை தரவேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் நாம் கர்நாடகாவை எதிர்நோக்கி இருக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. தேசிய நதிகளை இணைப்பதே இதற்கு நிரந்தரமான தீர்வாக அமையும். இதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக செவி சாய்க்க வேண்டும்.
கர்நாடகா உபரி நீரை வைத்துக்கொண்டே நமக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கிறது. கர்நாடகாவில் தமிழகம், தமிழக மக்கள், தமிழக மக்களுக்கு எதிராக அவர்கள் செய்யக்கூடிய விஷயங்கள் கண்டனத்திற்கு உரியது. நமது நீர்வளத்துறை அமைச்சர் டெல்லி சென்று வருகிறார். ஆனால், இங்கு எதுவுமே முடிவுக்கு வரவில்லை. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம் என்று அவர் சொல்கிறார். இதுவே முதலில் கண்டனத்திற்குரியது. அதேபோல், நம் தமிழர்களை கர்நாடகாவில் அடிக்கிறார்கள் இதற்கெல்லாம் எப்போது நிரந்தர தீர்வு ஏற்படும் என கேள்வி எழுப்பினால், ‘அதற்கு நான் என்னப்பா பண்றது’ என நகைச்சுவையாக பேசுகிறார். இது நகைச்சுவையாக பேசக்கூடிய விஷயம் கிடையாது. மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம். காவிரியில் தண்ணீரை பெற்று தமிழ்நாட்டு விவசாயிகளை காப்பது அரசின் கடமை.
என்.எல்.சி.க்கு நமது தொழிலாளர் நிலத்தை கொடுத்துவிட்டு, ஊதியம் இல்லாமல், நிரந்த பணி இல்லாமல் எத்தனையோ ஆண்டுகளாக போராடிவருகின்றனர். எனவே என்.எல்.சி.யில் அவர்களுக்கு உரியஉரிமை பெற்றுத் தரவேண்டும்.நமது மீனவர்களின் உயிருக்கோ, உடமைக்கோ உரிய பாதுகாப்பு இல்லை. எனவே அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு கச்சத் தீவை மீட்டெடுப்பதே. இதனை ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)