முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நான்கு நாளில் முடிவெடுப்பார் என தெரிவித்தார். இதனையேற்ற உச்சநீதிமன்றம், பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்குப் பரிந்துரைத்ததும் அ.தி.மு.க. அரசுதான். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அ.தி.மு.க. அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பேரறிவாளனின் விடுதலை விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓரிரு நாட்களில் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக துணை முதல்வரின் ட்விட்டர் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.