People saved the school that was going to be demolished!

சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி ஆகியவை தனித்தனியாக இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சி. முட்லூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்தப் பள்ளியின் முகப்பில் உள்ள சாலையின் வழியாக நாகப்பட்டினம் முதல் விழுப்புரம் வரை 4 வழி புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்க பள்ளியை வேறு இடத்தில் கட்டிக் கொடுப்பதாகத்தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கூறியுள்ளனர்.

இதற்கு சி. முட்லூர் ஊராட்சி மன்றத்தலைவர் வேதநாயகி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பள்ளியை இடிப்பதற்கு முன் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்குத்தேர்வு நேரம் என்பதால் எந்த விதத்திலும் கல்விக்கு இடர்பாடு இல்லாமல் மாற்று இடத்தை ஏற்பாடு செய்த பிறகே பள்ளியை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை, கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், திடீரென நெடுஞ்சாலைத் துறையினர் பள்ளியில் உள்ள பொருட்களை காலி செய்துவிட்டு உடனடியாக மாணவர்களை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சி. முட்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் வேதநாயகி தலைமையில், புவனகிரி ஒன்றிய துணைத் தலைவர் வாசுதேவன்,பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இதில் மாணவர்களுக்கு மாற்று இடம் தயார் செய்து கொடுத்த பிறகே பள்ளியை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத்தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் கல்வித் துறையினருக்கு அளித்தனர். அதன் பெயரில் தற்காலிகமாக பள்ளியை இடிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். பள்ளியை இடித்தால் மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படும். எனவே மாற்று இடத்தை ஏற்பாடு செய்த பிறகே இடிக்க வேண்டும் என்பது அப்பகுதியில் உள்ள மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.