
தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 17ந் தேதி ஈரோடு தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநிலத் தலைவர் ராஜ்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
"மருத்துவ காப்பீடு திட்டத்தில் நிலுவையில் உள்ள 20 ஆயிரம் மனுக்கள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் 70 வயது மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கியது போல் 3 சதவீத அகவிலைப்படி முன்தேதியிட்டு வழங்க வேண்டும். தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர் நீண்டநாள் நிலுவை கோரிக்கைகளை தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.