Skip to main content

இலவசப் பட்டா- லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

Published on 23/12/2020 | Edited on 23/12/2020

 

patta vigilance officers madurai high court bench

 

தமிழகத்தில் இலவசப் பட்டாக்கள் வழங்கியது பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

இலவச வீட்டு மனையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று (23/12/2020) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அவரது மகன் அரசு மருத்துவராகவும் பணியாற்றி வருகின்றனர். அரசு ஊழியர் என்பதை மறைத்து அரசின் இலவசப் பட்டாவைப் பெற்றுள்ளதாக வாதிட்டார். 

 

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், இலவசப் பட்டாக்கள் ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலேயே வழங்கப்படுகின்றன. இலவசப் பட்டாக்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுகிறது என்றனர். மேலும், மனுதாரர் ராஜாவின் மகனுக்குத் தெரியாமல் அவரது பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் இலவசப் பட்டாக்கள் வழங்கியது பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இலவசப் பட்டாக்கள் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பின் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், வழக்கிலிருந்து இருந்து விடுவிக்குமாறு மனுதாரரின் மகன் அளித்த மனுவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Holiday notification for Chennai High Court

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதோடு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளர் எம்.ஜோதிராமன் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உட்பட்ட விளவங்கோடு தொகுதியின் இடைத்தேர்தல் ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர் நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு அமர்வுகளுக்கும் விடுமுறை நாள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.