parents have requested cm Stalin to help their daughter treatment

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி கண்ணன்(39). இவரது மனைவி பிரியதர்ஷினி(28). இந்த தம்பதிகளுக்கு ஐந்து வயதில் காருண்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர்களது மகள் காருண்யா பிறந்து இரண்டு மாதத்தில் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறியதால் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று பார்த்தபோது, மஞ்சள் காமாலை நோய் பாதிப்பால், குழந்தையின் ரத்தம் முறிந்து விட்டது. வேறு ரத்தம் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன் பின்னர் குழந்தைக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது.

ஆனாலும், தொடர்ந்து குழந்தைக்கு ரத்தப் பற்றாக்குறை இருந்து வந்தது. மேலும், குழந்தைக்கு அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்பட்டு மூச்சுத் திணறலும், காய்ச்சலும் ஏற்பட்டு சோர்ந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது குழந்தையின் எலும்பு மஜ்ஜையில் ரத்தம் உருவாகி மண்ணீரலுக்குச் செல்லும் போது, மண்ணீரல் அந்த ரத்தத்தை ஏற்காததால் குழந்தைக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுவதாகக் கூறியுள்ளனர்.

மேலும், பிறந்த 2 மாதம் முதல் குழந்தைக்கு ரத்தம் செலுத்தி வருகின்றனர். குழந்தை இரண்டு வயதுக்குப் பின்னர் 20 நாட்களுக்கு ஒரு முறை ரத்தம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது குழந்தைக்கு 5 வயது கடந்ததும் மண்ணீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisment

குழந்தைக்கு என்ன நோய் என்பது முழுமையாகத் தெரியாத நிலையில் பெற்றோர்களுக்கும், குழந்தைக்கும் மரபணு பரிசோதனை செய்துள்ளனர். இதில் தங்கள் குழந்தைக்கு என்ன நோய் என மருத்துவர்கள் உறுதியாகத் தெரிவிக்காத நிலையில், தற்போது உள்ள மருத்துவச் செலவிற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை செலவாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தினக் கூலி வேலை செய்து வரும் கண்ணன், மகள் காருண்யாவுக்குஉடல்நலக் குறைவு காரணமாக அவரை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும், குழந்தையை உடனிருந்து கவனித்துக் கொள்வதால் வேலைக்குச் செல்ல முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றார். அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கள் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து குழந்தைக்கான மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் தங்கள் குழந்தை உயிரைக் காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்க காருண்யாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து குழந்தையின் தாயார் பிரியதர்ஷினி கூறும்போது, “எங்களுக்குக் குழந்தை பிறந்து இரண்டு மாதத்தில் இருந்தே அவளது உயிரைக் காக்க மருத்துவச் சிகிச்சை அளித்துப் போராடி வருகிறோம். எனது கணவர் குழந்தையை பார்ப்பதிலேயே கவனம் செலுத்துவதால், வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இதனால் குடும்பம் நடத்தவே சிரமமான நிலை உள்ளது. மேலும், உடல் நலக்குறைவு காரணமாகக் குழந்தையையும் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை.

Advertisment

எங்கள் குடும்ப வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவே போராடி வரும் நிலையில், குழந்தையின் மருத்துவச் செலவுக்கு ரூ.20 லட்சம் ஆகும் என்பது எங்கள் தலையில் விழுந்த பேரிடியாக உள்ளது. எனவே தமிழக முதலமைச்சர் எங்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து எங்கள் வயிற்றில் பால் பார்க்க வேண்டும். சிகிச்சை முடிந்ததும் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புகிறோம்” என்றார் கண்ணீரோடு.