Skip to main content

‘எம் பையம் மேல எப்படி கை வைக்கலாம்...’ - ஆசிரியரைப் புரட்டியெடுத்த பெற்றோர்

 

Parents beat up principal for scolding son

 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கீழநம்பிபுரத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் சுமார் 24 மாணவர்கள் பயின்று வருகின்றனர். எட்டயபுரம் பகுதியின் வீரப்பட்டியைச் சேர்ந்த குருவம்மாள் இப்பள்ளியின் தலைமையாசிரியையாக உள்ளார். தருவைக்குளத்தைச் சேர்ந்த பரத் இடைநிலை ஆசிரியராகப் பணியிலிருக்கிறார்.

 

இந்தப் பள்ளியில் தெற்கு கல்மேட்டைச் சேர்ந்த சிவலிங்கம், செல்வி தம்பதியின் மகன் பிரதீஷ் (7) 2ம் வகுப்பு பயின்று வருகிறான். இவனது பெற்றோர் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வசித்து வருவதால் பிரதீஷ் தனது தாத்தா முனியசாமி வீட்டிலிருந்தபடி படித்து வருகிறான். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர் பரத், மாணவன் பிரதீஷை வீட்டுப் பாடம் எழுதி வரும்படி சொல்லியிருக்கிறார். மாணவனும் தான் எழுதிய வீட்டுப் பாடத்தை ஆசிரியரிடம் காட்ட, அதைப் பார்த்த ஆசிரியர் இது நீயாக எழுதவில்லை. யார் எழுதிக் கொடுத்தார்கள் என்று கேட்டதாகத் தெரிகிறது. இது பற்றி தாத்தா முனியசாமி தனது மகள் செல்விக்கு ஃபோனில் தகவல் தெரிவித்தவர் அது சமயம் பிரதீஷை ஆசிரியர் அடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதனால் ஆத்திரத்தில் ஊர் திரும்பிய சிவலிங்கம் அவரது மனைவி செல்வி இருவரும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் பரத்திடம் என் மகனை எப்படி அடிக்கலாம் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர் பரத், தான் மாணவனை அடிக்கவே இல்லை. எனக் கூறியிருக்கிறார். ஆனாலும் ஆவேசமான சிவலிங்கம், செல்வி ஆகியோர் ஆசிரியர் பரத்தை உதைத்துக் கீழே தள்ளியவர்கள் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதைக் கண்டு பதறிப் போய் தடுக்கச் சென்ற தலைமை ஆசிரியை குருவம்மாளுக்கும் அடி விழுந்திருக்கிறது. இந்த தாக்குதல் ரகளையைக் கண்டு பீதியான மாணவர்கள் பெருங்கூச்சலிட்ட நேரத்தில் சத்தம் கேட்டு கிராம மக்கள் பள்ளிக்குத் திரண்டு வந்திருக்கிறார்கள். இதைக் கண்டு மிரண்டு போன சிவலிங்கம், செல்வி இருவரும் தப்பியோடியிருக்கிறார்கள்.

 

இத்தாக்குதல் குறித்து தலைமை ஆசிரியை குருவம்மாள் எட்டயபுரம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து பள்ளி சென்று விசாரணை நடத்திய விளாத்திகுளம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அனிதா உள்ளிட்ட போலீசார் ஆசிரியரைத் தாக்கிய சிவலிங்கம், செல்வி, செல்வியின் தந்தை முனியசாமி மூவரையும் கைது செய்தனர். இதனிடையே ஆசிரியரைத் தாக்கிய தம்பதியரைக் கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் எட்டயபுரம் காவல் நிலையம் முன்பு திரண்டது  பரபரப்பாகி விட்டது.  

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !