Skip to main content

தபால் மூலம் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் சேவை நிறுத்தம்

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

கல்வி கற்கவும், பணியாற்றவும், ஏற்றுமதி, இறக்குமதி என தொழில் புரியவும் வெளிநாடுகளில் நமது மக்கள் பலர் உள்ளார்கள் அவர்களுக்கான தேவைப்படும் பொருட்கள் தபால் மூலம் அனுப்பப்படுவது வழக்கம். இப்போது கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக எல்லாமே அடியோடு நிறுத்தப்பட்டது.

 

 Parcel dispatch service ban

 

ஈரோட்டில் தலைமை தபால் நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது கரோனா வைரஸ்  தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 42  ஐரோப்பிய நாடுகளுக்கு பார்சல் அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது.

இது சம்பந்தமாக தபால்நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ஈரோட்டைச் சேர்ந்த பலர் கல்வி கற்க மாணவ மாணவிகளாக ஐரோப்பிய நாடுகளில் படிக்கின்றனர் . அவர்களுக்கு அத்தியாவசிய தேவையான நம்ம ஊர் அரிசி, பருப்பு , மசாலா பொருட்கள் மற்றும் அவர்களுக்கான உடை, துணிகள் ,போர்வை , பெட்ஷீட் என ஜவுளிகளை மாதம் ஒரு முறை அவர்களது பெற்றோர்கள் தபால் மூலம் அனுப்பி வைப்பார்கள். இதைப்போலவே  ஜவுளி உற்பத்தியாளர்கள், ஜவுளி இடைத்தரகர்கள் தங்களது உற்பத்தியான வேட்டி, சேலை, பெட்ஷீட் என ஜவுளிகளை  சாம்பிளாக அங்குள்ளவர்களுக்கு அனுப்புவார்கள். மாதத்திற்கு ஈரோட்டில் மட்டும் ஐந்து லட்சம் ரூபாய் வரை வெளிநாட்டு பார்சல் பதிவு செய்யப்படும்.

இதில் ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், போலாந்து, நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 42 நாடுகளுக்கு ஜெர்மன் நாட்டின் லூப் தான்ஷா என்ற விமானம் மூலம் பார்சல் அனுப்பி வைக்கப்படும். தற்போது கரோனா  வைரஸ் பரவி வருவதால் ஜெர்மனி விமான சேவை முழுமையாக ரத்து செய்துள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கு பார்சல் அனுப்புவது இந்த ஒருவாரமாக நிறுத்தப்பட்டு விட்டது" என்றார்.
 

வெளிநாட்டில் உள்ள நம் மக்கள் இந்த கரோனா வைரஸ் தாக்கத்தால் நம்ம ஊரிலிருந்து அத்தியாவசிய பொருட்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ - பைக் டாக்சிகளுக்கு தடை!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
ban on bike taxis in karnataka

வாடகை கார், பைக் டாக்சி போன்ற வாகனங்கள் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வேகமாகவும், பயணக் கட்டணம் குறைவாகவும் கொடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரில் ஊஃபர், ரேபிடோ போன்ற சில நிறுவனங்கள் பைக் டாக்சி சேவைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியது.

இதற்கு ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த அனுமதியால் தங்களின் வருவாய் பாதிக்கப்படுவதாகக் கூறி போராட்டங்கள் நடத்தினர். ஆனால், அன்றைய அரசு தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, பைக் டாக்சிகளில் இரவில் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுப்பதாகப் பல புகார்கள் எழுந்தன. அந்த வகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூர் பகுதியில் பைக் டாக்சியில் சென்ற பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. 

இந்த நிலையில், இந்த மின்சார பைக் டாக்சி திட்டத்துக்கு கர்நாடகா அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து கர்நாடகா அரசின் போக்குவரத்து துணை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த மின்சார பைக் டாக்சி திட்டம், மோட்டார் வாகன சட்டத்தை மீறுகிறது. இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படுகிறது. மேலும், இந்த இருசக்கர மின்சார வாகனங்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. வாகன நம்பர் பிளேட் இல்லாத மின்சார வாகனங்களால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால், கர்நாடகாவில் இந்த மின்சார பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

3 மாதங்களுக்குக் கோழி இறைச்சிக் கடைகளுக்குத் தடை!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Ban on chicken shops for 3 months in andhra

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. 

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும், அந்தப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளைத் திறக்கவும் தடை விதித்தும், ஒரு கி.மீ முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளில் வெளியூர்வாசிகள் கோழி இறைச்சியை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார்.