Skip to main content

விஐபி-க்கு மிரட்டல் ஆடியோ! கண்டுகொள்ளாத காவல்துறை..!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

Paramakudi sagayam audio video


"என்னை செய்யுறதக்கு வேற யார்றா இருக்கா..?" என தனக்குத் தெரிந்த முக்கிய நபர்களின் பெயரினை துணையாகக் கொண்டு குடும்பத்திற்கே கொலை மிரட்டல் விடுக்கின்றது ஒரு ஆடியோ. அதற்குத் துணையாக சம்பந்தப்பட்ட நபர் திருநெல்வேலி அரிவாளை சுழற்றும் வீடியோ என இரண்டுமாக வாட்ஸ் அப் செய்தியாக பரமக்குடி நகரில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றது .

 

வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கும் அந்த ஆடியோ மற்றும் வீடியோவிற்கு சொந்தக்காரர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள முத்துசரளாபுரத்தைச் சேர்ந்த சகாயம் என்பவர். 2019 காலகட்டங்களில் மாநில கலை, கலாச்சாரப் பிரிவின் இணை செயலாளராக பாஜகவில் பதவி வகித்து பணியாற்றிய சகாயம், பரமக்குடி ஓட்டைப்பாலம் அருகில் சொந்தமாக பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றார். 2019க்கு முன்பு வரை அமெரிக்காவில் ஐ.டி. ஆர்கிடெக்காக பணியாற்றிய நிலையில், பரமக்குடியில் வசிக்கும் தன்னுடைய உறவினரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.டி., அருளானந்துடன் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கின்றது.

 

நாளடைவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், எஸ்.எம்.டி., அருளானந்த், "தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் அவதூறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் சகாயம்" என பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

 

இதே வேளையில் மாணிக்கம் என்பவரும் சகாயம் மீது ஆட்கடத்தல் புகாரளித்த நிலையில், 2019ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய வேளையில் சென்னை விமான நிலையத்திலேயே சகாயம் கைது செய்யப்பட்டு முதுகுளத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

 

இடையில் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கி காண்பித்து மிரட்டியதாக செய்திகளும் வெளியாகியது. இவ்வேளையில், திமுக விஐபி-யின் குடும்பத்திற்கே கொலை மிரட்டல் விடும் நோக்கில் வெளியிடப்பட்ட ஆடியோவும், வீடியோவும் இன்று வைரலாக பரவி வருகின்றன.

 

இதுகுறித்து ஆடியோ, வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர் சகாயத்தினைத் தொடர்புக் கொண்டோம், "எனக்கும் எஸ்.எம்.டி.க்கும் பிரச்சனை இருந்தது உண்மை. என்னை பண விவகாரத்தில் ஏமாற்றி விட்டார். ஏமாற்றிய கோபத்தில் அவரைப் பற்றி முகநூலில் பதிவிட்டது மட்டுமே உண்மை. மற்றையபடி இந்த ஆடியோவிற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. அது என்னுடைய வாய்ஸே இல்லை. வீடியோவில் இருப்பது நான்தான். அது அட்டைக் கத்தி! திரைப்படத்தில் நடிப்பதற்காக பயிற்சி எடுத்தேன்" என குற்றச்சாட்டினை மறுத்தார் அவர். 

 

கொலை மிரட்டல் ஆடியோ, வீடியோ என்பது ஒரு புறமிருப்பினும் காவல்துறையினரின் வளையத்திலுள்ள அந்த முக்கிய நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டும் காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் கதிகலங்கியுள்ளனர் பரமக்குடி வாசிகள்.

 

சார்ந்த செய்திகள்