தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாளை இந்தியாவின் 74 -ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாட்டின் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, கொண்டாட்டங்களின் போது பொதுமக்கள் சமூக விலகலை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர் பலரும் மக்களுக்குச் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை தகர்த்தெறிந்து, நம் தாய்த்திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வேளையில், மாண்புமிகு அம்மா அவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளைச் சிறப்பிக்கத் திருவுருவச் சிலைகள், மணி மண்டபங்கள் அமைத்தல், தியாகிகள் ஓய்வூதியத் தொகை உயர்த்துதல் உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார் என்பதை நினைவுகூர்வதில் மகிழ்கிறேன். இப்பொன்னாளில், விடுதலைக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளைப் போற்றி வணங்கி, தாய்த்திருநாடும், நம் தமிழ்நாடும் வளம் பெற ஒற்றுமையாய் உழைத்திட உறுதியேற்போம்" எனத் தெரிவித்துள்ளார்.