Skip to main content

”மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருக்கிறார் முதல்வர்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

Panchayat Union Office Building in Dindigul attur

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் நிலக்கோட்டை தொகுதியில் செம்பட்டியில் செயல்பட்டு வந்தது. ஆத்தூர் தொகுதி மக்கள் நீண்ட நாட்களாக தங்கள் தொகுதியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்து சென்றார். இதையடுத்து தமிழக முதல்வர், ரூ.3 கோடியே 45 இலட்சம் ஒதுக்கீடு செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பனிக்கான பூமி பூஜை ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கோழிப்பண்ணை பிரிவில் நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், ஊராட்சி மன்றத்தலைவர் ஐ.ஜம்ரூத்பேகம், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி வரவேற்றுப் பேசினார். 

 

விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழக மக்கள் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆத்தூர் தொகுதி மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக உள்ளார். தொகுதி மக்கள் நலன் கருதி நான் விடுக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருவதோடு வருங்கால தொலைநோக்கு திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். குறிப்பாக தமிழகத்திலேயே கூட்டுறவுத்துறை சார்பாகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆத்தூர் தொகுதியில் அமையவும், ரெட்டியார் சத்திரம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரவும் உத்தரவிட்டார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். 

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் நிற்காமல் அக்கல்லூரியில் இன்னும் சில வகுப்புகள் சேர்க்கப்பட உள்ளன. இதன்மூலமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். 1965ம் ஆண்டு சித்தையன்கோட்டை மணிசெட்டியார் தி.மு.க. சார்பாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இன்றுவரை 57 வருடங்களாக ஆத்தூர் தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. ஆத்தூர் தொகுதி மக்களின் நலன் கருதி தாலுகா அலுவலகம், நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், பொறியியல் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி இப்போது புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் உட்பட எண்ணற்ற நலத்திட்டங்கள் மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் போக்குவரத்துக் கழகம் சார்பாக பணிமனை அமைய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இதன்மூலம் போக்குவரத்து வசதியும் எளிதாகும். ஏழை எளிய மாணவர்கள் குறிப்பாக மாணவியர்கள் தங்கள் வீட்டின் முன்பு இலவசமாக அரசு பேருந்தில் பயணம் செய்து கல்லூரி வாசலில் இறங்கிப் படிக்கும் அளவிற்குப் போக்குவரத்து வசதி ஆத்தூர் தொகுதியில் எளிதாக்கப்படும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.