ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த செங்காடு ஊராட்சியைச் சேர்ந்த தேவேந்திரன்(50). 12-ஆம் வகுப்பு வரை படித்த இவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாகத் தனது கிராமத்தில் பசுமையைப் பாதுகாக்கும் வகையிலும் பசுமையை வலியுறுத்தி ஊராட்சி முழுவதும் சுமார் 10,000 மரக்கன்றுகளை வழங்கியும் வளர்த்தும் வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஊராட்சி மன்ற தலைவராகப் பொறுப்பேற்ற தேவேந்திரன் வீடுதோறும் 14 பழ வகை மரக்கன்றுகளை வழங்கி உள்ளார். ஏற்கனவே ஒரு லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகளை விதைத்த நிலையில், மேலும் அதைத்தொடர்ந்து தனது ஊராட்சியில் பயனற்ற நிலையில் உள்ள கருவேலமரங்களை முழுவதுமாக அகற்றி சுமார் 2 லட்சம் பனை விதைகள் மற்றும் 5,000 வேங்கை நாவல் போன்ற பயனுள்ள மரக்கன்றுகளை நடத்திட்டமிட்டு அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தேவேந்திரன் கூறியுள்ளார்.
மேலும், “என்னுடைய செங்காடு ஊராட்சி முழுவதும் பசுமைப் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு நபர் 10 மரக்கன்றுகள் மற்றும் 100 பனை விதைகள் என்ற கணக்கில் ஊராட்சியின் மக்கள் தொகை ஏற்ப மரக்கன்றுகளை நட்டு இலக்கை அடைய வேண்டும் என்பதே தனது கோரிக்கை எனக் கூறிய அவர் அதற்காகத் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதுவரை 700-க்கும் மேற்பட்ட நபர்கள் மூலமாக இத்திட்டத்தை அமல்படுத்தியதாகத் தெரிவித்தார்.
பசுமைப் புரட்சிக்காகத் தனி மனிதராக தன்னுடைய சொந்த செலவில் போராடிவரும் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரனுக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் என அனைவரும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கிராம முழுவதும் புற்றுநோய் மற்றும் சக்கர வியாதியைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சீதா புலி மரக்கன்றுகளை 100 நாள் வேலையில் ஈடுபடும் பெண்கள் தாங்களாகவே முன்வந்து ஊராட்சி மன்ற தலைவருடன் இணைந்து அப்பகுதியில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஊர்வலமாகச் சென்று மரக்கன்றுகளை வழங்கினர். அத்தோடு அதன் பயன்கள் என்னவென்று கூறி வீடுகளில் வளர்த்து வந்தால் இந்த செடியால் எந்த ஒரு நோயும் வராது என அறிவுறுத்தியுள்ளனர்.