Skip to main content

பெண் ஊராட்சி தலைவர்களின் கணவர்களுக்கு தடை

Published on 15/06/2020 | Edited on 15/06/2020
 district




கடலூர் மாவட்டத்தில் பெண்கள் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சி நிர்வாகத்தில் அவர்களது கணவர்கள் உறவினர்கள் தலையீடு இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 


உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளில் பெண்கள் வெற்றி பெற்று பதவியேற்றுள்ளனர். ஊராட்சி நடவடிக்கைகளில் தலைவர்கள் மற்றும் துணை தலைவர் பதவிகளில் உள்ள பெண்களின் கணவர்கள், உறவினர்கள் தலையீடு அதிகம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளது. அதையடுத்து நிர்வாகத்தில் கணவர்களின் தலையீடு இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்திற்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 


கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் மூலம் மேற்படி சுற்றறிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் கடமைகளும் பொறுப்புகளும் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்களையே சேரும். 
 


ஊராட்சி சட்டத்தின்படி ஊராட்சி நிர்வாகத்தின் அனைத்து பொருப்புகளுக்கும் அவரே பொறுப்பாளர் ஆவார் என்பதால் அவருக்கு அரசு முழு பொறுப்பையும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளது. ஊராட்சி நிர்வாகப் பணிகளில் ஊராட்சி தலைவரின் கணவர் மற்றும் உறவினர்களுடைய தலையீடுகள் இருக்கக்கூடாது. தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவர்கள் மட்டுமே ஊராட்சி நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். விதிகளை மீறி செயல்படும் ஊராட்சி தலைவர்களின் கணவர் மற்றும் உறவினர்கள் மீது ஊரக உள்ளாட்சி சட்டத்தை மீறுவதாக கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 


பொதுவாக நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பார்கள். ஆனால் அவர்களை வீட்டிலேயே முடக்கிவைத்து விட்டு அவர்களது கணவர்கள், உறவினர்கள் அனைத்து அலுவலகங்களுக்கும் சென்று தாங்கள் தான் தலைவர் என்று அதிகாரிகளிடம் கூறிக்கொள்வது, பொதுமக்களிடமும் இவர்களே தலைவர் போன்று அதிகாரம் செய்வது, அரசு திட்ட பணிகளை முன்னின்று செயல்படுத்துவது, மேலும் ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் இவர்களே முன்னின்று நடத்துவது, வெற்றி பெற்ற பெண் பிரதிநிதிகளை ரப்பர் ஸ்டாம்ப் போல கையெழுத்துப் போட மட்டும் பயன்படுத்துவது பல இடங்களில் நடைபெற்று வருகிறது.



இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் மேற்க்கண்டவாறு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. இதன் பிறகாவது உள்ளாட்சிகளில் வெற்றி பெற்ற பெண் பிரதிநிதிகள் சுயமாக செயல்படுவார்களா? அப்படி செயல்பட விடுவார்களா? என்பது இனிமேல்தான் தெரியவரும் என்கிறார்கள் இவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயியைத் தாக்கிய ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்!

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

The panchayat secretary was suspended for farmer incident

 

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் இன்று (02.10.2023) காலை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் என பலரும் கலந்துகொண்டனர்.

 

இந்த கூட்டத்தின் போது விவசாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கு இருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பிய விவசாயியை எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று மக்கள் மத்தியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

அதே சமயம் கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விவசாயியைத் தாக்கிய ஊராட்சி செயலாளர் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை சஸ்பெண்ட் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

 

 

Next Story

‘ஊராட்சி மணி’ குறை தீர்க்கும் மையம் தொடக்கம்!

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

panchayat bell grievance redressal center started

 

ஊரகப் பகுதிகளில் ஏற்படும் குறைகளைக் களையும் பொருட்டு ‘ஊராட்சி மணி’ என்ற அமைப்பு ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பொது மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க ஊராட்சிகளைத் தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு இலவச குறை தீர்வு அழைப்பு எண் 155340 பிரத்யேகமாக மாநில அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் பொதுமக்கள் மிக எளிமையாக 155340 என்ற தொலைப்பேசி வாயிலாகவும்,  Ooratchimani.in என்ற வலைத்தளம் மூலம் எளிதாக அணுக முடியும். மேலும் பெறப்படும் புகார்களின் தன்மைக்கேற்ப அலுவலக ரீதியிலான கால தாமதம் தவிர்க்கப்பட்டு குறிப்பிட்ட காலவரையறைக்குள் அப்புகார் மீது எளிய முறையில் உடனடித் தீர்வு காணப்படும். அதே சமயம் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோருக்கு ஏற்படும் குறைகளையும், சந்தேகங்களையும் இந்த ஊராட்சி மணி மூலம் அணுகி பதில் பெறும் வகையில் இச்சேவையை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று (27.09.2023) காலை 11.00 மணி அளவில் தொடங்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியின் போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மைச் செயலாளர், முனைவர் ப. செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பா. பொன்னையா, கூடுதல் இயக்குநர் (பொது), திரு. எம்.எஸ். பிரசாந்த்  மற்றும் இதர அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.