Skip to main content

பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரிய வழக்கு... காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

Palanichamy, Sasikala, etc. case to be investigated ... High Court orders police to respond

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரைக் கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

 

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கூடலூர் சுனில் ஆகிய 9 பேரை விசாரிக்க அனுமதி கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

 

அதில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத் தான் தெரியும் எனவும், புலன் விசாரணைக் குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் கூடுதலாகச் சிலரை எதற்காக விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மனுதாரர்கள் விளக்கமாக கூறவில்லை என நீதிபதி சுட்டிக்காட்டினார். இதுதொடர்பாக மனுதாரர்கள் விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும், மூவரின் வழக்கு குறித்து மூன்று வாரங்களில் சோலூர்மட்டம் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 27ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.