Skip to main content

முதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்? பி.ஆர்.பாண்டியன்

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

தேனி அருகே பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள பகுதியை இன்று (16.07.2019) அப்பகுதி விவசாயிகளோடு சந்திக்க சென்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனை போலீசார் தடுத்து நிறுத்தினர். 
 

அப்போது பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், உலகத்திலேயே பழமையானதும், இமயமலை உருவாகுவதற்கு முன் உருவான மலை என்கிற சிறப்பு பெற்ற அப்பர் மலையை அழித்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை ஏற்க முடியாது. தமிழகத்தில் தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய இரு மழைகளை உருவாக்கி தருவது அப்பர் மலையை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை தான். 
 

p r pandiyan



இத்திட்டத்தால் தமிழகம் பருவ மழையை இழக்கக்கூடிய பேராபத்து ஏற்படும். இதனால் தமிழகம் பேரழிவை சந்திக்கும் ஆபத்து உள்ளதால் ஒட்டு மொத்த தமிழக மக்களும் போராட்டக்களத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பேரழிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்குகிற போது தமிழக அரசின் நிலையை தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவு படுத்த மறுப்பது ஏன்? மரபைக்கூட பின்பற்ற மறுப்பது நியாயமில்லை. சாதக பாதகம் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்.
 

உலகத்தில் இதுவரையில் ஆறு நாடுகளில் பூமிக்கடியில் பாலைவனப் பகுதிகளில்தான் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டும் தான் சிறப்பு பெற்ற மலையில் குடியிருப்புப் பகுதியில் நிறைவேற்றப்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இதை கைவிட வேண்டும். இல்லையேல் தமிழகம் போராட்ட களமாக மாறும் என எச்சரிக்கிறேன் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்: “மத்திய அரசுக்கு சவால் விடுகிற வகையில் உயரிய நோக்கோடு கொண்டுவரப்படுகிறது..”-  பி.ஆர். பாண்டியன் 

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

Tamil Nadu Agriculture Budget  P.R. Pandian comment

 

இன்று (14.08.2021) தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆங்காங்கே விவசாயிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடிவருகின்றனர். அதேபோல, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதை வரவேற்கும் விதமாக வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி விவசாயிகளோடு கொண்டாடினார். 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு சட்டம் போட்டு தன்னை வேளாண் கொள்கையிலிருந்து முற்றிலும் விலக்கிக் கொண்டுள்ளது. இந்திய விவசாயிகளைக் கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடிமைபடுத்திவிட்டது. இதனை எதிர்த்து வடமாநில விவசாயிகள் தொடர்ந்து போராடிவருகிறார்கள். இந்தியா முழுவதும் ஆதரித்து அவர்களோடு துணை நின்று போராடிவருகிறோம்.

 

தமிழக அரசாங்கம் வேளாண் சட்டத்தைக் கைவிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் ஒத்தக் கருத்தோடு தீர்மானம் நிறைவேற்ற உத்தரவாதம் அளித்திருக்கிறது. இந்நிலையில், இந்திய விவசாயிகள் மத்திய அரசின் விவசாய விரோத சட்டத்தால் ஒட்டுமொத்தமாக விவசாயத் தொழிலில் இருந்து வெளியேற வேண்டுமோ? கார்ப்பரேட்டுகளிடம் அடிமைப்பட வேண்டுமோ? என்கிற அச்ச நிலையில் பரிதவித்துவருகிறார்கள்.

 

இந்திய விவசாயிகளுக்குத் துணிவை ஏற்படுத்தும் வகையிலும் தமிழகத்தில் விவசாயத்தை தொழிலாக அங்கீகரித்து லாபகரமான தொழிலாக மாற்றும் உயரிய நோக்கோடு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்றைய நாள் விவசாயிகளின் வாழ்க்கையில் கிடைத்த ஒரு பொன்னாள். இன் நன்னாளில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தையும் தமிழக விவசாயிகள் சார்பாக வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம்.

 

Tamil Nadu Agriculture Budget  P.R. Pandian comment

 

இந்த நிதிநிலை அறிக்கை மத்திய அரசுக்கு சவால் விடுகிற வகையில் விவசாயிகளைப் பாதுகாக்கும் உயரிய நோக்கோடு கொண்டுவரப்படுகிறது. எனவே இதற்கு விவசாயிகள் முழுமையாக துணை நிற்போம். ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருகிறபோது சில கசப்பான உணர்வு கூட இருக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு விவசாயிகள் நலனை முன்னிறுத்திக் கொண்டுவரப்படுகிற இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை முழு வெற்றிபெற தமிழக விவசாயிகள் துணை நிற்போம், துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

 

காவிரி பிரச்சனையில் தொடர்ந்து கர்நாடக அரசியல் கட்சிகள் தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஒன்றிணைந்து செயல்படுகிறது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா, தான் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் காவிரி பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், கர்நாடக சிறைகளில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொடும் தண்டனைக் கைதிகளான குண்டர்களை விடுவித்து கர்நாடகாவில் உள்ள தமிழர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பேருந்துகள் நூற்றுக்கும் மேல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. தமிழர்கள் அகதிகளாக அடித்து விரட்டப்பட்டார்கள். இதுவரையிலும் இதற்குத் தீர்வு கிடைக்காத நிலை தொடர்கிறது.

 

இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதைத் தொடர்ந்து தமிழகம் எதிர்க்குமேயானால் கர்நாடகம் தமிழகத்திற்கு எதிரான அரசியல் மோதல்களைத் துவங்குவதைத் தடுக்க இயலாது என மிரட்டியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும், அண்டை மாநில உறவுகளையும் சீர்குலைக்கும் செயலாகும். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியும் தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். மோடி அரசு இதனை வேடிக்கை பார்க்கக் கூடாது. இச்செயல் குறித்து மத்திய உள்துறை கர்நாடக அரசிடம் உரிய விளக்கம் கேட்க வேண்டும்.

 

தமிழக முதலமைச்சர் இதனைக் கண்டிக்க வேண்டும். உடனடியாக மத்திய உள்துறையிடம் அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி புகார் மனு அளிக்க தமிழக அரசு முன் வேண்டும். தமிழர்களையும், அவர்களின் சொத்துக்களையும் காப்பாற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இனி ஒரு தமிழனும் காயப்படுவதற்கோ, சொத்துக்களில் துளி இழப்பதற்கோ தமிழகம் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்துகிறோம்” என்றார்.

 

 

Next Story

கொள்முதல் நிலையங்களை மூடிய மத்திய அரசுக்கு பி.ஆர். பாண்டியன் கண்டனம்..! 

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

P.R. Pandiyan condemn  for closing the purchasing stations

 

மத்திய அரசு பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நெல் கொள்முதல் செய்வதை கைவிட்டு மத்திய அரசின் உணவுக் கிடங்குகளை மூடிவிட்டது. இதனை எதிர்த்து  அம்மாநில விவசாயிகள் கிடங்குகள் முற்றுகைப் போராட்டத்தை  நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியா முழுவதிலும் ஆதரவு கேட்டுள்ளனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில்  மாநில  விவசாயிகள்  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதை அடையாளப்படுத்தும் வகையில்  தமிழகம் தழுவிய அளவில் மன்னார்குடி அருகே இருக்கிற பாமணி  மத்திய தானியக் கிடங்கை  முற்றுகையிடுவதற்கு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில்  நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் நேற்று மன்னார்குடி பந்தலடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு  சென்றனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனை ஏற்க மறுத்த விவசாயிகள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது.. பிஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; “விவசாயிகளுக்கு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் 3 வேளாண் விரோத சட்டங்களை உலகப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டுவந்து விவசாயிகளை பெரு முதலாளிகளிடம் அடிமைப்படுத்திவிட்டது. கடந்த ஒரு வாரகாலமாக பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் ரபி பருவ அறுவடை தீவிரமடைந்து உள்ளது. மதிய உணவு கழகம் தனது கொள்முதலை நிறுத்தி, கொள்முதல் நிலையங்களை மூடிவிட்டது. தனியாரிடம் விற்றுக் கொள்ளுங்கள் என்று தட்டிக் கழிக்கிறது. இதன் மூலம் மத்திய அரசினுடைய துரோகம் வெளிப்பட்டுள்ளது.  

 

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறது. எனவே இந்த சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் அந்நிய முதலாளிகளிடம் அடிமைப்பட்டு போவார்கள், போராடும் விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு திசை திருப்ப முயற்சிக்கிறது. இதற்கு அதிமுக கட்சியும் ஆட்சியும் முழு துணை போகிறது. 

 

இந்நிலையில் தற்போது மோடி அரசு கொள்முதலை கைவிட்டதன் மூலம் மத்திய அரசின் துரோகம் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கிறது. எனவே வேளாண் விரோத சட்டங்களை விவசாயிகள் மீது திணிக்க முயற்சிக்கும் பாஜகவையும் அதற்குத் துணைபோகும் அதிமுகவுக்கும் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். 

 

எதிர்காலத்தில் தமிழகத்திலும் மத்திய அரசு கொள்முதலை கைவிடும் நிலை ஏற்பட்டு இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. எனவே தமிழக விவசாயிகள் ஒன்றுபட்டு தேர்தல் களத்தில் வாக்குகள் மூலமாக மோடி அரசுக்கும் எடப்பாடி அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் விவசாயிகள் வாக்களிக்க முன்வர வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். சட்டத்தை திரும்பப் பெறும் வரையிலும் விவசாயிகள் போராட்டம் ஓயாது என எச்சரிக்கிறேன்” என்றார்.