/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHC1_69.jpg)
உருமாற்றம் பெற்ற கரோனா பரவும் சூழலில், பிற நாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த 27-ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 622 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உருமாற்றம் பெற்ற கரோனா பிரிட்டனில் பரவத் துவங்கியுள்ளது. மிக வேகமாகவும், எளிதாகவும் பரவும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில், பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் டிசம்பர் 31- ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், சீனாவில் இருந்து வரும் பயணிகள் மட்டும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், பிற நாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமும் கரோனா பரவியதால், பிரிட்டன் மட்டுமல்லாமல், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்கக் கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,‘இன்னொரு ஊரடங்கை அறிவித்தால் மிக மோசமான நிலை ஏற்படும். பிரிட்டனில் இருந்து வருபவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை, கண்டிப்பாக 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும். ஐந்தாவது நாள் கரோனா பரிசோதனை செய்து, அறிகுறி இல்லாவிட்டால் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை நடத்துவதற்கான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)