Skip to main content

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அட்வைஸ்! நாடாளுமன்றத்தில் அதிமுக கடும் அமளி! 

Published on 12/12/2018 | Edited on 12/12/2018
parliament



ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அட்வைஸ் செய்தபடி நாடாளுமன்றத்தில் கடும் அமளி செய்துள்ளனர் அதிமுக உறுப்பினர்கள்.


மத்திய நீர்வளக் குழுமம், கர்நாடகத்திலுள்ள மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக சபையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இன்று காலை அவை கூடியதும் நோட்டீஸ் கொடுத்தனர். 
 

இதேபோல் காங்கிரஸ் கட்சியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் வெவ்வேறு பிரச்சனைகளை முன்வைத்து சபையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தது. 

 

இதனை நாடாளுமன்ற சபாநாயகர் ஏற்கவில்லை. உடனடியாக இதனை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 
 

 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போதே, நமக்கு டெல்லி சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த எடப்பாடி, எம்பிக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதன்படி கடந்த வாரம் அதிமுக எம்பிக்கள் கூட்டம் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. 

 

 

''இனியும் நாம் பாஜகவை நம்பி அரசியல் பண்ண முடியாது. அவர்கள் நமக்கு எதிராக இருக்கிறார்கள். அதனால் தமிழக நலன்களுக்கு எதிராக பாஜக எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு காட்டியாக வேண்டும். ஆகையால் 12ஆம் தேதி கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக அரசை எதிர்த்து போர்க்குணத்துடன் ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் அதிமுக எம்பிக்களின் நடவடிக்கையில் இருக்க வேண்டும்'' என்று ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அட்வைஸ் செய்திருந்தனர். இந்த அடிப்படையில்தான் இன்று அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டம் அமல்” - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
D.K.Sivakumar said Meghadatu plan will be implemented when the Congress government is established in central

தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

இதற்கிடையே, விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “தேவையான அனுமதிகளை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்கான ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்படவுள்ளன. தேவையான அனுமதிகளை கொடுத்தால் விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூர் நகரில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலையொட்டி, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது, மேகதாது திட்டத்திற்காக போராட்டம் நடத்தினோம். அதற்கு பணிந்து அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க ரூ.1,000 கோடி ஒதுக்கியது. பெங்களூரில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. மேகதாது திட்டத்தை அமல்படுத்தினால்தான் பெங்களூருக்கு குடிநீர் வழங்க முடியும். அதனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயன் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவாக கருத்து கூறியுள்ளது” என்று கூறினார்.

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.