
கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில்,இணையத்தளங்களில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால், மாணவர்களின் கவனம் சிதைகிறது. இதனால், உரிய விதிகள் வகுக்கும் வரை, ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், ஆன்லைன் வகுப்புகளுக்காக மொபைல், லேப்டாப் போன்றவற்றைபார்த்துக் கொண்டிருப்பதால், மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகவும், ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில், ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், தமிழக அரசு விதிமுறைகள் வகுக்க உள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், விசாரணையைத் தள்ளிவைத்திருந்தது.
இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, மழலையர் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது. 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, ஒவ்வொரு பாடவேளையும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். நாளொன்றுக்கு ஒரு ஆசிரியர், ஆறு வகுப்புகளும், வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகளும் எடுக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த வேண்டும். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது. 1-ஆம் வகுப்புமுதல் 8-ஆம் வகுப்பு வரை, 30 முதல் 45 நிமிடங்கள் 2 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். 9-ஆம் வகுப்புமுதல் 12-ஆம் வகுப்பு வரை, 30 முதல் 45 நிமிடங்களுக்கு 4 பாடவேளைகள் நடத்தப்பட வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கு குழந்தைகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் வெறும் பரிந்துரை அடிப்படையில் இருப்பதாகவும், இதை அமல்படுத்த முடியாது எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசாணையை முழுமையாகப் படிக்காமல், எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் அரசாணையில் இடம் பெற்றுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி, தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு, மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், ஆன்லைன் வகுப்புகள், அனைத்துத் தரப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பதால், இந்த வழக்கில், அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றோர் சங்கங்களுக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில், ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் பத்திரிகையில், இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 19-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது எனத் தெரிவித்து விளம்பரம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)