Skip to main content

வெங்காய மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி வைத்து போதைப் பொருள் கடத்தல்! லாரியுடன் சரக்கு பறிமுதல்!!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

Onion truck


லாரியில் வெங்காய மூட்டைகளுக்கு அடியில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பதுக்கி வைத்து கடத்தி வந்ததாக கிருஷ்ணகிரி அருகே லாரி மற்றும் போதைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 
 


கரோனா ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமலில் இருந்தபோதும் கூட, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டதால், தனிநபர் கடைகள், தேநீர் கடைகள், பீடா கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட குட்கா வியாபாரிகள், அத்தியாவசியப் பொருள்களுடன் மறைத்து வைத்து போதைப் பொருள்களை கடத்துவது அதிகரித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல்துறைக்கு, பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காய்கறி சரக்கேற்றிச் செல்லும் லாரியில் குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. 
 

 


அதன்பேரில் காவல் ஆய்வாளர் ரஜினி மற்றும் காவலர்கள், சனிக்கிழமை (மே 30) ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரிமேடு என்ற இடத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அந்த வழியாகச் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு மினி லாரியை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். அதில் வெங்காய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த மூட்டைகளுக்கு அடியில் 123 பெட்டிகளில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு 10 லட்சம் ரூபாய். 
 

http://onelink.to/nknapp


விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜூ (36), உதவியாளராக வந்தவர் பொன்னேரி மீஞ்சூரை சேர்ந்த மணி (32) என்பது தெரிய வந்தது. பெங்களூரு சந்தாபுரத்தில் இருந்து சென்னைக்கு குட்கா பொருள்களைக் கடத்திச்செல்வது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், போதைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குருபரப்பள்ளி காவல்துறையினர், லாரி உரிமையாளரான விழுப்புரம் மாவட்டம் புது காலனியைச் சேர்ந்த செல்வகுமார் (45), குட்கா பொருள்களை ஆர்டர் செய்திருந்த சென்னை மாதவரத்தைச் சேர்ந்த பால்ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

24 மணி நேரத்தில் 3 பேர்; வெள்ளியங்கிரியில் தொடரும் மரணங்கள்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 3 people lost their lives in 24 hours; the tragedy continues in the Velliangiri trek

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தை பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், தொடர்ந்து சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளியங்கிரி  மலை  மீது ஏற முயன்ற மூன்று பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (68) வயது. மருத்துவரான இவர் நேற்று நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். இன்று காலை நான்கு மணி அளவில் மலையில் ஏறிக்கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த மூன்று பேரின் சடலங்களையும் கீழே கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.