Skip to main content

ஒரு லட்சத்திற்கு 20 ஆயிரம் வட்டி; ஆசை வலையில் சிக்கிய 9 ஆயிரம் பேரிடம் 90 கோடி ரூபாய் வசூலித்து மோசடி!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

சேலத்தில் தினுசு தினுசாக மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது லட்ச ரூபாய்க்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி வழங்குவதாக விரித்த ஆசை வலையில் சிக்கிய 9 ஆயிரம் பேரிடம் 90 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


சேலம் தாதகாப்பட்டி குமரன் நகர் 3- வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (51). இவருடைய மகன் வினோத்குமார். ஓமலூர் அருகே உள்ள மானத்தாள் தாண்டவனூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (49). இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில், 'ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில், கடந்த ஆண்டு ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர்.

one lakhs interest 20,000 peoples shock police investigation


இதன் நிர்வாக இயக்குநராக பாலசுப்ரமணியமும், இணை இயக்குநராக வினோத்குமாரும், சிறப்பு இயக்குநராக சுப்ரமணியமும் செயல்பட்டு வந்தனர். இந்நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக (டெபாசிட்) செலுத்தினால், அத்தொகைக்கு மாதந்தோறும் 20 சதவீதம் வட்டி, அதாவது 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டனர். 


அத்துடன், முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தினால் அதற்கும் தனியாக கமிஷன் வழங்கப்படும் என்றும் கூறினர். அவ்வாறு முதலீட்டாளர்களை சேர்த்து விட்டால், அதன்மூலம் மாதம் 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை கமிஷன் பெறலாம் என்றெல்லாம் தினுசு தினுசாக ஆசை வலை விரித்திருக்கிறார்கள். இதை நம்பிய சேலம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பலர், அந்நிறுவனத்தில் போட்டிப்போட்டுக் கொண்டு லட்சம் லட்சமாக முதலீடுகளைக் கொட்டினர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களிடம் இருந்த கிராஜூட்டி, பி.எப்., பணத்தைக்கூட இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர்.


இது ஒருபுறம் இருக்க, சேலம் சின்னத்திருப்பதி அபிராமி கார்டன் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவில், ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்தியா நிறுவன உரிமையாளர்கள் மீது புகார் அளித்தார். அதில், தான் செலுத்திய ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதிக்கு அவர்கள் பல மாதங்கள் ஆகியும் வட்டி வழங்கவில்லை என்றும், அசல் தொகையையும் திருப்பித் தராததோடு, 80 உறுப்பினர்களை சேர்த்து விட்டதற்கான 3 லட்சம் ரூபாய் கமிஷன் தொகையும் வழங்காமல் மோசடி செய்து வருவதாக கூறியிருந்தார். 


இந்த புகார் குறித்து ஆய்வாளர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினார். மேலும், ஜஸ்ட் வின் இந்தியா நிறுவன உரிமையாளர்களான பாலசுப்ரமணியம், சுப்ரமணியம் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தியதில், கடந்த ஒரே ஆண்டில் 9 ஆயிரம் பேரிடம் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 90 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், புதன்கிழமை (பிப். 12) கைது செய்தனர். 


அவர்களுடைய நிறுவனத்தில் இருந்து முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்கள், முதலீட்டாளர்கள் முறையாக வட்டி செலுத்தி வருவதாகவும், 100 பேருக்கு மட்டுமே வட்டி மற்றும் கமிஷன் தொகை வழங்காமல் இருப்பதாகவும் கூறியுள்ளனர். தலைமறைவாக உள்ள வினோத்குமார் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்