/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kilambakkam-entrance-art_6.jpg)
சென்னை கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார்.
இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்த போது, “கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/omni-art-model-bus_0.jpg)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது” என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கோயம்பேட்டில் இருந்து நேற்று (10.02.2024) இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதை பயணிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)