old women incident police investigation in tharamangalam

Advertisment

தாரமங்கலம் அருகே, நகைகளுக்காக மூதாட்டியை மின்சார வயரால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த உறவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி சின்னம்மாள் (வயது 78). இவருக்கு 2 மகன், 4 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி, குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

கடந்த ஜூலை 30- ஆம் தேதி இரவு சின்னம்மாள், அதே பகுதியில் உள்ள அவருடைய தோட்டத்தின் மோட்டார் அறையில் மின்சார வயரால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி உள்ளிட்ட 13 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன.

Advertisment

மர்ம நபர்கள் மூதாட்டியைக் கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து தாரமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் தொல்காப்பியன் மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவத்தன்று, மூதாட்டி சின்னம்மாள் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். பின்னர் அவரை, உறவினர் மகன் சுப்ரமணி (வயது 37) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று, அவருடைய தோட்டத்தில் இறக்கி விட்டிருப்பது தெரிய வந்தது. அதனால் சுப்ரமணி மீது சந்தேகம் வலுத்தது.

சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்த போது, நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை மின் வயரால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து, மோட்டார் அறையில் போட்டுவிட்டு நகைகளுடன் தப்பிச்சென்றிருப்பது தெரிய வந்தது.

Advertisment

இதையடுத்து சுப்ரமணியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அவரைத் தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.