/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/villupuram-clctr-office_0.jpg)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது ஜம்போதி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயது முனியம்மாள். நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை கேட்பு முகாம் நடந்து கொண்டிருந்தது. அப்போது மூதாட்டி முனியம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது முனியம்மாள் தற்கொலை செய்துகொள்வதற்கானகாரணம் குறித்து கூறியதாவது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு அதிகாரிகள் தனது கிராமத்தில் தமக்கு 3 சென்ட் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்கள்.
அந்த இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் அவருடைய பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் 20 பேர்களின் வீட்டுமனைப்பட்டாவையும் அதே நபர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளார். எனவே அந்த நபர் மீதுகடுமையான நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சொந்தமான வீட்டு மனைப்பட்டாவை மீட்டுத்தர வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது புகார் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அவரது புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து சற்று ஆறுதல் அடைந்த முனியம்மாள் தனது ஊருக்கு புறப்பட்டு சென்றார். இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)