60 வயது நிறைவடைந்த மூத்த குடிமக்களுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும் அவர்களின் நலன் கருதி சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1200 மாதாந்திர உதவித்தொகை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. ஏராளமான முதியவர்களின் வாழ்க்கையே இந்த உதவித் தொகையை வைத்தே நடக்கிறது. இப்படிப்பட்ட முதியவர்களின் உதவித்தொகையைத் தான் ஒருவர் ரூ.27 லட்சம் வரை திருடி இருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியான நபர்களை ஆய்வு செய்து அவர்களுக்கு மாதந்தோறும் சரியாக முதியோர் உதவித் தொகை செல்கிறதா? அதில் ஏதும் குளறுபடி நடக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய தனி வட்டாட்சியர்களும், வருவாய் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இத்தனை கண்காணிப்புகளையும் மீறி தான் இந்த முறைகேடு நடந்துள்ளது. கடந்த 2023 ம் ஆண்டில் மட்டும் புதுக்கோட்டையில் மட்டும் இறப்பு இல்லாமல் ஒரே அளவில் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதைப் பார்த்ததும் மாநில சமூக பாதுகாப்புத் திட்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு திடீரென புதுக்கோட்டை வந்து ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வில் ஒரே வங்கி கணக்கிற்கு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ.27 லட்சம் வரை சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி கணக்கு யாருடையது என்று விசாரணை செய்ததில் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர். தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கணினி மூலம் செய்ய வேண்டிய பணியை தனி ஒரு நபரான தேனி மாவட்டம் அம்பேத்ராஜா என்பவரை வைத்து தங்களிடம் உள்ள பாஸ்வேர்டுகளை கொடுத்து தினக்கூலிக்கு பதிவேற்றம் செய்யும் பணியை கொடுத்துள்ளனர்.
இந்தப் பணியின் போது, உதவித் தொகை பெற்று வந்தவர்களில் இறந்தவர்கள், வங்கி கணக்கில் ஆதார் இணைப்பு இல்லை என்று திரும்பி வரும் பணத்தை மீண்டும் அரசுக்கு அனுப்பாமல் தனது வங்கி கணக்கிற்கு அனுப்பி மொத்தமாக எடுத்துள்ளார். மேலும் ஒவ்வொரு உதவித் தொகைக்கும் வங்கி சேவைக் கட்டணம் ரூ.30 வழங்குவதையும் வங்கிக்கு அனுப்பாமல் தனது கணக்கிற்கே அனுப்பிக் கொண்டார். இப்படியே அனுப்பியதில் ஒரு வருடத்தில் மட்டும் ரூ.27 லட்சம் அவரது வங்கி கணக்கிற்கு சென்று எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த முறைகேடு காலத்தில் பணியில் இருந்த தனி வட்டாட்சியர்கள் பொன்மலர், சாந்தி, ரத்தினாவதி ஆகியோரே இந்தப் பணத்தை அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும் என்று ஆய்வு அதிகாரிகள் கூறிவிட்ட நிலையில் அம்பேத்ராஜாவை அழைத்து பணம் எங்கே என்று கேட்ட போது, ஆன்லைன் சூதாட்டத்தில் செலவாகிடுச்சு என்னிடம் பணம் இல்லை என்று அசால்டாக கூறியுள்ளார். அதனால் வட்டாட்சியர்கள் செய்வதறியாது நிற்கின்றனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதுடன் மேலும் எங்கெல்லாம் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளது என்பதைக் கண்டறியத் தயாராகி வருகின்றனர் சமூக பாதுகாப்புத் திட்ட அதிகாரிகள்.