புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாஞ்சன்விடுதி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடந்தது. விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு 188 பயனாளிகளுக்கு ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசும்போது, ''இன்று முதல் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கூறியுள்ளனர். அரசு முழுமையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் பாதுகாப்பு மையங்கள், உணவு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் செய்துள்ளனர். முகாம்களில் அதிகாரிகள் இருக்க வேண்டும். இந்த மாவட்டத்தின் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நான் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு சொன்னாலும் நிறைவேற்றுவதில்லை. என் தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மக்கள் என்னிடம் மூன்று சக்கர வண்டி கேட்டு மனு கொடுக்கிறார்கள். அந்த மனுக்களை அமைச்சராக நான் அதிகாரிக்கு அனுப்பி பேசினாலும் அந்த மனுவை பரிசீலிக்கிறாரா என்றே தெரியவில்லை.
ஒரு மாதம் முன்பு ஒரு இளைஞர் வந்தார் எப்படி வந்தார்ன்னா ஒருவர் தோளில் தூக்கி வந்தார். எனக்கு மூன்று சக்கர வண்டி வேண்டும் என்று மனு கொடுத்தார். அந்த மனுவுக்கும் நடவடிக்கை இல்லை. முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்றே இந்த துறையை வைத்துக் கொண்டு நலத்திட்டங்கள் வழங்குகிறார். இனிமேலாவது மாற்றுத்திறனாளிகளுக்கு கனிவோடு மூன்று சக்கர வண்டி உள்ளிட்ட நலத்திட்டங்களை அதிகாரிகள் வழங்க வேண்டும்.
அதேபோல, ஒரு மாதம் முன்பு எல்.என்.புரம் ஊராட்சியில் ஆய்வு செய்தேன். அப்போது ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தி வந்த கூட்டு ஆழ்குழாய் கிணறு பழுதடைந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு ஏராளமான விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள். அதனால் அவர்களுக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லி வேளாண் பொறியியல்துறை அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லை. நான் எனக்காக எதையும் கேட்கவில்லை. ஏழை எளிய மக்களுக்காகத் தான் கேட்கிறேன். இதுபோன்ற அரசு திட்டங்களை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும்'' என்று வேதனையோடு பேசினார்.