கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டம் என்றழைக்கப்படும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. தற்போது, இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.
இத்தகைய சூழலில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட எல்லையில் அமைந்துள்ளது வேளஞ்சேரி ஊராட்சி. வேளஞ்சேரி ஊராட்சியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தில் இருக்கும் மிகப்பெரிய ஏரியில் நான்கு ஐந்து அடி ஆழத்தில் தண்ணீருக்குள் நடந்து சென்று ஆபத்தான பகுதியில் வேலை செய்ய வைப்பதாகப் பணி செய்யும் பெண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர். மேலும் இப்படி ஆபத்தான முறையில் தண்ணீருக்குள் இறங்கிச் சென்று வேலை செய்யும்பொழுது சில நேரத்தில் பாம்புகள் கூட கடிப்பதாகக் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, எங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து உயிர் போகும் நிலை ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் இந்த பகுதியைச் சேர்ந்த வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள், தங்களுக்கு ஏரியைக் கடந்து தான் பணிகளை ஒதுக்குவதாகவும் தங்களை அங்குதான் வேலை செய்ய வேண்டும் எனக் கூறுவதாகப் பகிரங்கமான குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இங்கு நடக்கும் அவலங்கள் குறித்து டிவியிலோ மீடியாக்களிலோ பேட்டி கொடுத்தால் உங்களை அடுத்த நாளே 100 நாள் வேலையில் இருந்து துரத்தி விடுவோம் என்று அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து வெளியே கூறாமல் இந்த அவலத்திலேயே வாழ்ந்து வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள், இந்த சம்பவம் குறித்துப் பேச ஆரம்பித்துள்ளனர். இப்படி பெண்களை அடிமை போல் திருத்தணி வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆபத்தான முறையில் பணி செய்ய வைக்க வேண்டுமா? வேறு எங்கும் பணிகள் இவர்களுக்கு ஒதுக்க முடியாதா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக 100 நாள் பணிகளில் ஏற்படும் முறைகேடுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் நடக்கும் அசம்பாவித பணிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 27 பஞ்சாயத்து பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது, 100 நாள் வேலைத் திட்டத்தில் நடக்கும் அவலங்கள் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.