Officials inspect for Metro rail project between Hosur bommasandra 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் முதல் கர்நாடக மாநிலத்தில் உள்ள பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக ஓசூர் பகுதிகளை மெட்டோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இது தொடர்பாகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தபடி, அத்திப்பள்ளி வழியாக ஓசூர் முதல் பொம்மசந்திராவரை விரைவான போக்குவரத்து அமைப்பை (MRTS)அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை இறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் இன்று (27.08.2024) பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம். மகேஷ்வர் ராவ்வை பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து, ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை உள்ள மெட்ரோ பாதையின் முக்கிய அம்சங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் குழுவினர் மற்றும் ஆலோசகர்கள் ஓசூர் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டனர்.

அதோடு இந்த குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் எச்.எஸ். ஸ்ரீகாந்த் மற்றும் ஓசூர் துணை ஆட்சியர் பிரியங்கா ஆகியோரை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர். அத்திப்பள்ளி வழியாக பொம்மசந்திரா முதல் ஓசூர் வரை மொத்தம் தோராயமாக 23 கி.மீ நீளத்திற்கு, தமிழ்நாட்டில் 11கி.மீ. மற்றும் கர்நாடகாவில் 12 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ஒரு பணிமனையை உள்ளடக்கியதாக அமையும். இந்த கூட்டத்தில் விரைவான போக்குவரத்து அமைப்பைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஓசூர் மற்றும் பெங்களூரு இடையேயான போக்குவரத்து இணைப்பு மேம்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.