Skip to main content

நீதிமன்ற உத்தரவு; கோவில், கடைகளை இடித்து தரமட்டமாக்கிய அதிகாரிகள்

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Officials demolish the temple as per the court order

கள்ளக்குறிச்சி நகர் காந்தி சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரியில் இருந்து, காந்திரோடு வழியாக தென்கீரனூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு அகற்ற தடை விதிக்க சிலர் வழக்கு தொடர்ந்தனர். இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் இடிப்பதை அதிகாரிகள் நிறுத்தினர்.

இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற தடை கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து, 8 வாரத்திற்குள் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நீங்களே ஆக்ரமிப்பை அகற்றிக்கொள்ளுங்கள், நாங்கள் அகற்றினால் அதற்கான செலவுத் தொகையை உங்களிடம் வசூலிப்போம் என நீர்வளத்துறை சார்பில் கடந்த மே 16ம் தேதி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், தாமாகவே கட்டடங்களை இடித்து அகற்றி வருகின்றனர்.

அகற்றாத கட்டங்களை கடந்த 28ம் தேதி பொதுப்பணித்துறை சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மேலும் காந்தி சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோவில் மற்றும் தர்ம சாஸ்தா கோவிலை அகற்றுவது தொடர்பாக நேற்று கோவிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஜீன் 1 ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள பாசன அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் கோவில்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் அகற்றுவது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என கூறி கோவில் நிர்வாகத்தினர் திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அதன் பிறகு கோவிலில் உள்ள சிலைகளை நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் அகற்றம் செய்யப்பட்டு பழைய மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு கோவில்களும் இடிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் சம்பந்தமாக அதிரடி சோதனை

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
raid in Kalvarayan hill related to illicit liquor

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராய சம்பவத்தில் 67 பேர் உயிர் இழந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தின் பிறப்பிடம் எனக் கூறப்படும் கல்வராயன் மலையில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் ஐ.ஜி அஸ்ராகார்க் கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதி ஆகியோர் 200 க்கும் மேற்பட்ட போலீசாருடன் கல்வராயன் மலையில் அதிரடியாக கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டனர். 

இந்தச் சோதனையின் போது ஏற்கனவே கள்ளச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் பெயர் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்கள் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்களா? கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான மூலப் பொருட்கள் அவர்களுடைய வீட்டில் இருக்கிறதா என்ற சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அடர்ந்த வனப்பகுதி உள்ள இடங்களில் ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு சோதனைகளை செய்துள்ளனர். கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சும்பணி ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகளின் இன்றைய சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேற்கொண்டு கல்வராயன் மலையில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவம் தொடர்ந்து விடக்கூடாது எனக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

சின்னசேலம் பகுதி வழியாக கல்வராயன் மலை கரியாலூர் வெள்ளிமலை போன்ற பகுதிகளுக்கு சென்ற இவர்கள் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து சேராப்பட்டு என்ற மலைப் பகுதிக்கு சென்று அந்தப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட பின்னர். சோதனை முடிந்த பிறகு மலையிலிருந்து கீழே இறங்கி சங்கராபுரம் வட்டம் வழியாக வெளியேறிச் சென்றுள்ளனர்.

Next Story

அதிமுக திமுக காரசார விவாதம்; வாக்குவாதத்தில் முடிந்த நகர் மன்ற கூட்டம்!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
DMK AIADMK political debate in Kallakurichi Municipal Council meeting

கள்ளக்குறிச்சி நகராட்சியில் சாதாரண நகர மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெறுவதற்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஏற்கனவே நகராட்சி கூட்டம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை கண்ட அதிமுக கவுன்சிலர்கள் தமிழகத்தையே உலுக்கிய கள்ளச்சாராயம் சம்பவத்தில் கள்ளக்குறிச்சியில் 67 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு ஒரு இரங்கல் தீர்மானம் இல்லாததாலும், மேலும் நகர மன்ற கூட்டத்தில் இரங்கல் தீர்மானத்தை எழுத்துப்பூர்வமாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதை கண்ட சேர்மன் சுப்பராயலு  வாய்மொழியாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி தெரிவிக்கப்படும் என தெரிவித்து கூட்டத்தை தொடங்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக நகரச் செயலாளரும், 11-வது வார்டு கவுன்சிலருமான பாபு, “கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றாமல் இரங்கல் தீர்மானம் இல்லாமல் இந்த கூட்டம் நடப்பதால் இதிலிருந்து நாங்கள் வெளியேறுகிறோம்” என்று கூட்டத்திலிருந்து வெளியேறினர். அப்போது நகராட்சி சேர்மன் சுப்புராயலு உடனடியாக எழுந்து மைக்கை பிடித்து மக்கள் முதல்வர் வாழ்க என கோஷம் எழுப்பினார்.

இதற்கு அதிமுக கவுன்சிலர்களும், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க...” என முழக்கம் எழிப்பினர். இதனால் திமுக கவுன்சிலர்களும், அதிமுக கவுன்சிலர்களும் தங்கள் தலைவர்கள் புகழைப் பாடிக்கொண்டு கோஷம் எழுப்பினர். மேலும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஆக மாறி  பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது திமுக கவுன்சிலர்கள் தங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லியும் அதிமுக கவுன்சிலர்கள் இந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் வலுவாக கோஷம் எழுப்பி மேஜயை தட்டி பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டு அரங்கம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கள்ளச்சாராயம் குடித்து  உயிரிழந்த பட்டியலின மக்களுக்கு விரோதமாக நகராட்சி ஆணையரும் தமிழக முதல்வரும் செயல்படுவதாக அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிமுக கவுன்சிலர் வெளியேறிய பின்பு திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.