கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது. தற்போதைய நிலவரப்படி 280 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தென்னக ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நேற்றிரவு கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல எக்ஸ்பிரஸ், பெங்களூரு ஹவுரா அதிவிரைவு எக்ஸ்ப்ரஸ் ரயில், சரக்கு ரயில் மூன்றும் ஒடிசா மாநிலத்தில் பயங்கர விபத்துக்குள்ளாகி 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற செய்தியும் வந்துள்ளது. மிகுந்த துயரத்தையும் வேதனையையும் அளித்துள்ள இந்த பயங்கரமான விபத்து நாட்டையும் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதுடன் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன்பட்நாயக்குடன் பேசினேன். இது குறித்து ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்து மீட்புப் பணிகளுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தமிழக அரசு உதவத் தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தேன்.
அமைச்சர்கள் உதயநிதியும், சிவசங்கரும், போக்குவரத்து துறை செயலர் மற்றும் வருவாய்த்துறை செயலரான அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் ஒடிசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதியில் 4 அல்லது 5 தினங்களுக்கு தங்கி இருந்து மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிகளைச் செய்ய இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள், இந்திய காவல் பணி அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் கூடுதல் காவல் பணிகளை மேற்கொள்ள சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து பொதுமக்களுக்கு தகவல்களை அளிக்க மாநில கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொள்வதற்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டேன்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு வந்து சேர முடியாதவர்களையும் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் விபத்து நடந்த இடத்தில் இருந்து சென்னைக்கு திரும்ப இயலாதவர்களையும் அழைத்து வருவதற்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தமிழ்நாடு கொண்டு வர தமிழ்நாடு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. ஒடிசா மாநில அதிகாரிகளுடன் நமது அதிகாரிகள் தொடர்பில் இருந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்” எனக் கூறினார்.