/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/31_6.jpg)
என்.எஸ்.மாதேஸ்வரன்
''நிரபராதி என்ற நீதிமன்றத் தீர்ப்போடுதான் தலைவரை சந்திப்பேன்'' என்று சட்டப்போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஓசூர் நகரமன்ற முன்னாள் தலைவரும், முன்னாள் திமுக நகர செயலாளருமான என்.எஸ்.மாதேஸ்வரன்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்பேட்டையை சேர்ந்தவர் முருகன் மனைவி ஈஸ்வரி. இவர் ராயக்கோட்டை ஹட்கோ பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் தனக்கு சொந்தமான 14 சென்ட் நிலத்தை அபகரித்துவிட்டாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2018 செப்.7ல் தீர்ப்பு வழங்கிய ஓசூர் ஜே.எம்., 2 நீதிமன்றம், மாதேஸ்வரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து ஓசூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மாதேஸ்வரன் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 02.01.2019 புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், மாதேஸ்வரனை விடுவித்து உத்தரவிட்டு, மேலும் அவரிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகையை, திருப்பி வழங்கவும் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய மாதேஸ்வரன்,
2011 உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் நகராட்சி தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்டேன். என்னை எதிர்த்து தற்போது அமைச்சராக இருக்கும் பாலகிருஷ்ணா ரெட்டி அதிமுக சார்பில் நின்றார். அதிமுகவினர் எந்த வகையிலாவது வெற்றி பெற வேண்டும் என்று எல்லாவிதமான உச்சக்கட்டத்திற்கும் சென்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3333_1.jpg)
பாலகிருஷ்ணா ரெட்டி
2001ல் அதிமுக ஆட்சியில் இருந்தபோது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓசூர் நகரமன்ற துணைத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் வேலு என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதன்பிறகு திமுகவில் நான் இணைந்தேன். திமுகவில் இணைந்த பிறகு கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு கட்சிப் பணிகளை ஆற்றினேன். கட்சித் தொண்டர்களை அரவணைத்துச் சென்றேன். கட்சி அறிவிக்கும் மக்களுக்கான போராட்டங்களை வெற்றிக்கரமாக நடத்தினேன். இவையெல்லாவற்றையும் பார்த்துதான் கட்சித் தலைமை 2011 உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கியது.
தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டேன். இந்த நிலையில் எனது வெற்றியை முறியடிக்க எனது உறவினரான ஈஸ்வரி என்பவரை எனக்கு எதிராக தூண்டிவிட்டு, பொய்ப் பிரச்சாரம் செய்து எதிர்க்கட்சியினர் எனது வெற்றியை தடுத்தனர்.
வெற்றியடையாவிட்டாலும் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு கட்சிப் பணிகளை ஆற்றி வந்தேன். பல மேடைகளில் மத்திய, மாநில விரோத ஆட்சியை கண்டித்து பேசியதால் என் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு, அதில் முன்ஜாமீன் பெற்று வழக்குகளை சந்தித்து வருகிறேன். ஆயினும் பாஜக என்னை கைது செய்யக்கோரி காவல்நிலையம் முன்பே ஆர்ப்பாட்டம் செய்தது. இதேபோல் எனக்கு பல்வேறு நெருக்கடிகளை எதிர்க்கட்சியினர் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில்தான் நிலத்தை அபகரித்தாக 2011ல் தொடரப்பட்ட வழக்கில் 2018ல் எனக்கு ஓராண்டு சிறை தண்டனை என நீதிமன்றம் கூறியது. இதையடுத்து கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டேன்.
என்னால் கட்சிக்கு எந்த அவப்பெயரும் வந்துவிடக் கூடாது. தமிழகம் போற்றப்படுகின்ற நெறி தவறாமல் இருக்கும் தளபதிக்கும், தலைமைக்கும், கழகத்திற்கும் என்னால் எந்த அவப்பெயரும் வந்துவிடக்கூடாது என்று வேதனை அடைந்தேன். இதனால் வழக்கில் மேல்முறையீடு செய்ததில் நான் நிரபராதி என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பது எனக்கு மனநிறைவு அளிக்கிறது.
நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் விரைவில் தளபதியை சந்திக்க உள்ளேன். அவரை சந்தித்து கட்சிப் பணியாற்ற என்னை அணுமதிக்குமாறு கடிதம் கொடுப்பேன். தொடர்ந்து ஓசூரில் திமுக மென்மேலும் வளர்ச்சியடைய எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து களப்பணியாற்றுவேன். தளபதி தலைமையில் புதிய ஆட்சி அமைய தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)