NLC ;Tamil Nadu government pays Rs 3 lakh relief Amit Shah, Edappadi Palanisamy condolences!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதில் இரண்டாம்அனல் மின்நிலையத்தில் உள்ள 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் 5-ஆவது அலகில்பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெரியகாப்பான்குளத்தை சிலம்பரசன், தொப்புளிக்குப்பம் - இளங்கோவன், செல்வராஜ், கொல்லிருப்பு அருண்குமார், இளவரசன் மேலகுப்பம் பத்மநாபன் ஆகிய 6 பேர் பலியாகினர். மேலும் 17 பேர் தீ காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் “என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்தில் தொழிலாளர்கள் இறந்தது வேதனையளிக்கிறது. மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் பழனிசாமியிடம் கூறினேன். மத்திய அரசின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அதேபோல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,“என்.எல்.சி. விபத்தில் 6 நபர்கள் உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தகவல் கிடைத்தவுடன் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டேன்.எனது உத்தரவின் பேரில், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறையினர்உடனடியாக நிகழ்விடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 17 பேர் காயம் அடைந்தது கேட்டு வருத்தம் அடைந்தேன்.அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு உள்ளேன். அவர்கள் அனைவரும் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த 6 பேர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் அதிக காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment