வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல் நேற்றிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், சூறைக்காற்று மற்றும் விட்டு விட்டு பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வோரோடு சாய்ந்தன. மேலும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சில ஏரிகள் திறக்கப்பட்ட நிலையில், அடையாறு, வேளச்சேரி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்த பகுதிகளுக்கு விரைந்த பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் சாலையில் விழுந்த மரங்களையும், தேங்கியுள்ள வெள்ள நீரையும் வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை தரமணியில் உள்ள பெரியார் நகர், பாரதி நகர் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட இடங்களை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் துணை முதல்வருடன் உடனிருந்தனர்.