Skip to main content

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்; என்.ஐ.ஏ ஆய்வு

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
 NIA officials inspect in front of Guindy Governor House

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பிற்பகல் ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசினார். உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் மொத்தமாக, பெட்ரோல் நிரப்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 14 ஆம் தேதி ரவுடி கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக காவல்துறை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் அண்மையில் ஒப்படைத்தது.

இந்த நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒன்றரை மணி நேரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தன்று பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சில்வான் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரை புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சில்வானிடம் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறவுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் டெல்லி பயணம்!

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Governor R.N. Ravi sudden trip to Delhi!

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார். ஆளுநரின் இந்த செயல் மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

இத்தகைய சூழலில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் பயணமாக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் பலராலும் உற்று கவனிக்கப்படுகிறது. 

Next Story

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
CM MK Stalin Strong condemnation of Governor RN Ravi

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் எனத் தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு சட்டமன்றம் சற்றும் குறைந்தது அல்ல., ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார்.

இந்நிலையில் நான்காவது நாளாக இன்று (15.02.2023) சட்டப்பேரவை கூடியது. அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், “பெரியார், அண்ணாவின் வாரிசு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட்டு வருகிறேன். கோடிக்கணக்கான மக்களின் வளர்ச்சிக்காக என் மனசாட்சியின்படி நான் செயல்பட்டு வருகிறேன். திராவிட மாடல் கொள்கைகளில் பயணிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை, தடுக்கவும் முடியாது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தால் கர்ப்ப கிரகத்தில் சமத்துவம் நுழையத் தொடங்கிவிட்டது. எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் திராவிட மாடல் அரசு இயங்கி வருகிறது. தெற்கு வளர்கிறது வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது வடக்கு வாழ்கிறது. இதன் மூலம் தெற்கு தேய்கிறது என்ற நிலை மாறியுள்ளது ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. அரசு தயாரிக்கும் உரையை அப்படியே வாசிப்பது தான் ஆளுநரின் கடமை. ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைக்கு சட்டமன்றத்தை பயன்படுத்திக் கொண்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆளுநரின் செயல் மக்களை அலட்சியப்படுத்தும் அவமானப்படுத்தும் செயல். இதன் மூலம் ஆளுநர் அரசியலமைப்புச் சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறி உள்ளார். பாசிசத்தை எதேச்சதிகாரத்தை எதிர்த்து நிற்கும் நாம் இதுபோன்று சிறுபிள்ளைத்தனமான செயலை கண்டு அஞ்சமாட்டோம்” எனத் தெரிவித்தார்.