Skip to main content

சேலம் ரவுடி கொல்லப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள் அம்பலம்! 

 

New information has come out case Salem rowdy Kattoor Anand

 

சேலத்தில் ரவுடி காட்டூர் ஆனந்தன் கொடூரமாக கொல்லப்பட்டதன் பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.     

 

சேலம் வலசையூரைச் சேர்ந்த ராஜாவின் மகன் காட்டூர் ஆனந்தன் என்கிற ஆனந்தன் (44). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி,  ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் பல காவல்நிலையங்களில் உள்ளன. இவருடைய சொந்த ஊர், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள காட்டூர் ஆகும். அந்த ஊரில் ரவுடித்தனம் செய்து வந்த ஆனந்தன், தன்  பெயருக்கு முன்னால் ஊரின் பெயரை அடைமொழியாக சேர்த்துக் கொண்டார். வீராணம் காவல்நிலையத்தில் 'ஹிஸ்டரி ஷீட்' எனப்படும் ரவுடிகள் பட்டியலில் இவருடைய பெயரும் இருந்தது. பேருந்து நடத்துநர் கொலை  உள்ளிட்ட இரண்டு கொலை வழக்குகளும் இவர் மீது விசாரணையில் இருந்து வருகிறது. காட்டூர் ஆனந்தனுக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டாக ஆளுங்கட்சி முக்கியப் பிரமுகர்  ஒருவருக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 5, 2023) இரவு 10.30 மணியளவில் காட்டூர் ஆனந்தனும், அவருடைய கூட்டாளி பிரபாகரன் (24)  என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் காட்டூர் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தனர்.  

 

அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆனந்தனை வழிமறித்தது. வீச்சரிவாள், பட்டாக்கத்தி சகிதமாக காரில் இருந்து இறங்கிய  கும்பலைப் பார்த்ததும் பதறிய ஆனந்தன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த அவரை மர்ம கும்பல்  சரமாரியாக வெட்டியது.     பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, காரிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க வாழப்பாடி டிஎஸ்பி ஹரிசங்கரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலை நடந்த விதம் குறித்தும், சில பின்னணி விவரங்களும் கிடைத்துள்ளன. சம்பவத்தின்போது மர்ம கும்பல் ரவுடி ஆனந்தனை சரமாரியாக வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். அதன்பிறகு  அவரை சில அடி தூரம் இழுத்துச்சென்று கழுத்தை கொடூரமாக அறுத்துள்ளனர். தலை லேசாக கழுத்துடன் ஒட்டியிருக்கும் நிலையில் சடலத்தை  சுடுகாடு அருகே வீசிவிட்டு மர்ம கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்று விட்டது தெரிய வந்துள்ளது. கொலை கும்பலின் இலக்கு காட்டூர் ஆனந்தன் மட்டும்தான் என்பதால் அவருடன் வந்த கூட்டாளி பிரபாகரன் மீது பெரிய அளவில் தாக்குதல்  நடத்தவில்லை. எனினும், மர்ம கும்பல் ஆனந்தனை குறி வைத்து தாக்கும்போது பிரபாகரனுக்கும் தாடையில் லேசாக காயம் ஏற்பட்டுள்ளது.  அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

 

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த காட்டூர் ஆனந்தனுக்கு உள்ளூர் மட்டுமின்றி சேலத்திற்கு வெளியிலும் பல எதிரிகள் உள்ளனர். அதனால்  இவரால் பாதிக்கப்பட்ட யாராவது பழிதீர்க்கும் விதமாக கொலையை அரங்கேற்றியுள்ளனரா? உறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இந்தக் கொலை நடந்ததா? பெண் விவகாரமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. சம்பவத்தன்று அவர் கோவைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பியுள்ளார். அதன்பிறகு இரவு வெள்ளியம்பட்டி அருகே உள்ள உறவினர்  வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போதுதான் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று காலையில் இருந்து இரவு வரை அவர்  எங்கெங்கு சென்றார்? யார் யாரைச் சந்தித்தார்? என்பது வரை கொலை கும்பல் அங்குலம் அங்குலமாக பின்தொடர்ந்து சென்று தெரிந்து  வைத்துள்ளனர். இது தொடர்பாக சிகிச்சையில் உள்ள பிரபாகரனிடமும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், அத்தனூர், கீரிப்பட்டியைச் சேர்ந்த 3 பேரிடமும்  சந்தேகத்தின்பேரில் விசாரணை நடந்து வருகிறது. அவர்களில் இரண்டு பேர் ரவுடிகள். இவர்களுக்கும் கொல்லப்பட்ட ஆனந்தனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதனால் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இது ஒருபுறம் இருக்க, இந்தக் கொலையின் பின்னணியில் மற்றொரு ரவுடிக்கு முக்கியத் தொடர்பு இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது. காட்டூர் ஆனந்தன், ஆளுங்கட்சி பிரமுகருடன் நெருக்கம் ஏற்பட்டதை அடுத்து அரசியல் பக்கம் தன் கவனத்தை திருப்பத் தொடங்கினார்.  இதையடுத்து அவர் அண்மைக் காலமாக கட்டப்பஞ்சாயத்து விவகாரங்களில் ஈடுபடாமல் கொஞ்சம் ஒதுங்கி இருந்துள்ளார். கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு ஆனந்தனின் கூட்டாளியான ரவுடி ஒருவர் அவருடைய பெயரைச் சொல்லி, ஒரு தரப்பினரிடம்  கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டி 10 லட்சம் ரூபாய் பறித்துள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்ட காட்டூர் ஆனந்தன், அவரை அழைத்து சரமாரியாக தாக்கி, எச்சரித்துள்ளார். அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால், ஆனந்தன் இருக்கும்வரை நம்மால் உள்ளூரில் கட்டப்பஞ்சாயத்து செய்ய முடியாது. அதனால்  ஆனந்தனின் தலை உருண்டால்தான் நான் கெத்தாக இருக்க முடியும் என்று சக கூட்டாளிகளிடம் சவால் விட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  அதனால் அந்த ரவுடிதான், கூலிப்படையை ஏவிவிட்டு காட்டூர் ஆனந்தனை கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்க வேண்டும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.  சந்தேகத்திற்குரிய அந்த ரவுடி திடீரென்று தலைமறைவாகி விட்டதால் அவர் மீது காவல்துறைக்கு மேலும் சந்தேகத்தின் பிடி இறுகியுள்ளது.    

 

இந்நிலையில் திங்கள்கிழமை (பிப். 7) சேலம் அரசு மருத்துவமனையில் காட்டூர் ஆனந்தனின் சடலம், உடற்கூராய்வு செய்யப்பட்டது. அப்போது  சடலத்தை வலசையூர் வழியாக கொண்டு செல்லாமல் அயோத்தியாப்பட்டணம் வழியாக கொண்டு செல்லும்படி காவல்துறையினர் உறவினர்களிடம் கூறினர்.  இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, உடற்கூராய்வு அறை முன்பு தரையில் அமர்ந்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாநகர காவல்துறை துணை ஆணையர் லாவண்யா மற்றும் உதவி ஆணையர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து,  அவர்களும் காவல்துறை முடிவுக்கு ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ஆனந்தனின் சடலம் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊரான காட்டூரில் ஆனந்தன் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !