Skip to main content

நீட் மதிப்பெண் சான்றிதழ் முறைகேடு: டாக்டர் பாலச்சந்திரன் மற்றும் மாணவி தீக்‌ஷா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

NEET Father and daughter Bail Petitions Dismissed

 

நீட் மதிப்பெண் சான்றிதழில் முறைகேடு செய்ததன் காரணமாக கைது செய்யப்பட்ட டாக்டர் பாலச்சந்திரன் மற்றும் அவரது மகளான மாணவி தீக்ஷா ஆகியோரின்  ஜாமீன் மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வியிடங்களை நிரப்புவதற்கான மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த தீக்‌ஷா என்ற மாணவி அளித்த  சான்றிதழ்களில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. பரிசோதித்ததில், நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்களே பெற்றிருந்த மாணவி 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி சான்றிதழ் கொடுத்தது தெரியவந்ததை அடுத்து,  காவல்துறையில்  புகார் அளிக்கப்பட்டது.

 

அதன்பேரில் மாணவி தீக்க்ஷாவும், அவரது தந்தையும் பல் மருத்துவருமான பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் போலியான ஆவணங்களைத் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

 

சிறையில் உள்ள இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு நடைபெற்று வந்தது.

 

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஆன்லைன்  மூலமே நீட் மதிப்பெண் சான்றிதழ் பெறப்பட்டது. ஒ.எம்.ஆர் நகல் கோரியபோதுதான் இருவேறு நகல் கிடைக்கப்பெற்றது. தவறு ஏதும்  செய்யவில்லை. தேர்வு நடத்தும் அதிகாரிகள் வட்டத்தில்தான் குளறுபடி உள்ளது’ என வாதிடப்பட்டது. 

 

மேலும், ‘நான் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். எனக்கு இல்லாவிட்டாலும் எனது மகளுக்காவது ஜாமீன் வழங்க வேண்டும்’ என தந்தை பாலச்சந்திரன் தரப்பில் கோரப்பட்டது.

 

காவல்துறை தரப்பில் ஆஜரான நகர குற்றவியல் வழக்கறிஞர் கௌரி அசோகன்,  ‘இந்த விவகாரத்தில் திட்டமிட்ட மோசடி நடைபெற்றுள்ளது. இது, சமூகத்தில்  மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை ஜாமீனில் விடுவித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துவிடும் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது’  என எதிர்ப்பு தெரிவித்தார்.

 

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, ‘மனுதாரர்கள் சமர்ப்பித்த இரண்டு ஓ.எம்.ஆர். நகல்களில் ஒன்றில்தான் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொன்றில், எந்த விவரங்களும் இல்லை. சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகக் கூட, மனுதாரர்கள் அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். தீக்ஷாவின் தந்தை பாலச்சந்திரன், சாதாரண கூலித்தொழிலாளி அல்ல. மருத்துவர் என்பதால் அவரது மகளுக்கு மருத்துவ இடத்தைப் பெற இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.  அதற்கு அவரது மகளும் உடந்தையாக இருந்தது தெரியவருகிறது. 

 

சம்பந்தப்பட்ட மாணவி 18 வயது நிரம்பியவர் என்பதால், தனக்கு இதனைப் பற்றி எதுவும் தெரியாது என கடந்து செல்ல முடியாது. 12ஆம் வகுப்பில் 56 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ள மாணவி,  நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் எடுத்தார் என்று கூறுவதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையின் நீண்ட தேடலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு, குறுகிய காலமே சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை ஜாமீனில் விடுவித்தால், சமுதாயத்தில் தவறான எடுத்துக்காட்டாக அமைந்துவிடும்’ என தெரிவித்து, இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

உயர் மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் ‘0’ மதிப்பெண்ணாக நிர்ணயம்!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Neet cut off for higher medical studies fixed as '0' marks

உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாக குறைத்து தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5 ஆயிரம் உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த சூழலில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் நாடு முழுவதும் காலியாக உள்ள ஆயிரம் இடங்களை நிரப்ப கட் ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு பூஜ்ஜியமாக நிர்ணயித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஆயிரம் சிறப்பு மருத்துவ இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு குறித்த தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

vck ad

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கட்டணமாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் ரூ.  2.5 கோடி முதல் 2.5 கோடி வரை வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டில் நீட் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான மதிப்பெண்ணை 20 சதவீதமாக தேசிய மருத்துவ ஆணையம் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.