Skip to main content

நாமக்கல்லில் தொடங்கி புதுக்கோட்டையில் பொறி வைத்துப் பிடித்த கஞ்சா பண்டல்கள்... தொடரும் விசாரணை...

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

Pudukkottai

 

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுமார் 50 கிலோ கஞ்சாவுடன் ஆறுமுகம் என்பவரை போலிசார் கைதுசெய்து ரகசிய விசாரணை செய்தபோது, புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தான் தனக்கு கஞ்சா வருவதாகக் கூறியுள்ளார்.

 

இந்தத் தகவலின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் பூபதி தலைமையிலான குழுவினர் ஆறுமுகத்தை 'பொறி'யாகப் பயன்படுத்தி 'தனக்கு மேலும் 200 கிலோ கஞ்சா வேண்டும் புதுக்கோட்டையில் வந்து வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கிறேன்' என்று பேச வைத்துள்ளனர்.

 

ffff

 

தொடர்ந்து கஞ்சா பண்டல்கள் மாற்றப்பட வேண்டிய இடங்களையும் உறுதி செய்து கொண்ட நாமக்கல் போலிசார், புதுக்கோட்டை வந்து வெள்ளனூர் காவல் சரகத்தில் உள்ள சிப்காட் அருகே ஒரு டாடா ஏ.சி.இ வாகனத்துடன் ஆறுமுகத்தை காத்திருக்கச் சொல்லிவிட்டு போலிசார் மறைந்திருந்தனர். 

 

ஆறுமுகம் சிப்காட்டில் வந்து காத்திருப்பதை உறுதி செய்து கொண்ட புதுக்கோட்டை நபர், ஃபோர்டு காரில் கஞ்சா பண்டல்களை ஏற்றிக் கொண்டு வந்து ஆறுமுகம் காட்டிய டாடா ஏ.சி.இ வாகனத்தில் மாற்றிக் கொண்டிருந்தபோது உதவி ஆய்வாளர் பூபதி தலைமையிலான போலிசார் மடக்கிப் பிடித்து 200 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா வியாபாரியான அரிமளம் அருகில் உள்ள சீராடும்செல்வி கிராமத்தைச் சேர்ந்த பத்பநாபன் மகன் ஆரோக்கியதாஸ் (வயது 49) என்பவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

dddd

                                                                             ஆரோக்கியதாஸ் 

 

ஆரோக்கியதாஸிடம் செய்த விசாரனையில் ஆந்திராவிலிருந்து வாங்கி வந்த கஞ்சா பண்டல்களை திருமயம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வீரமணி மனைவி மாரிக்கண்ணு (வயது 45) என்பவர் வீட்டில் பல நாட்களாக பதுக்கி வைத்திருந்து, தற்போது எடுத்து வந்ததாகக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக மாரிக்கண்ணுவும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளார்.

 

ஆனால், ரகசியமாக வந்த நாமக்கல் போலிசார் ரகசியமாகப் பிடித்துக் கொண்டு நாமக்கல் சென்றுள்ளனர். தகவல் அறிந்து புதுக்கோட்டை போலிசார் விசாரணைக்காக மீண்டும் அழைத்து வந்துள்ளனர்.

 

Ad

 

கிழக்கு கடற்கரை வழியாக கஞ்சா, தங்கம் கடத்தல் தொடர்ந்து நடப்பதால் இந்த கஞ்சாவும் கடற்கரை பகுதியில் இருந்து வாங்கி வந்ததா? என்றும் மேலும் இவர்களுடனான தொடர்புகள் குறித்தும் புதுக்கோட்டை மாவட்ட போலிசார் ரகசிய விசாரனை செய்து வருகின்றனர். சரியான விசாரணைக்குப் பிறகு கடலோரத்தில் மொத்தமாகவும் சில்லரையாகவும் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் பெண் உள்பட பலர் சிக்கலாம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். 

 

மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் இளைஞர்களைச் சீரழித்த போதை மாத்திரை, போதை ஊசி விற்ற கும்பலை சங்கிலித் தொடர் போல சென்று பலரை கைது செய்து ஏராளமான இளைஞர்களைக் காப்பாற்றினார். அதே போல, தற்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கஞ்சா கும்பல் நெட்வொர்க்கை முழுமையாகப் பிடித்து கஞ்சா இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டையை மாற்றுவார் என்கிறார்கள் போலிசார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.