Skip to main content

"போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்?"- சீமான் கேள்வி!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

naam tamilar katchi seeman statement

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (07/06/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி சர்வதேசப் பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா  அப்பள்ளியில் பிஞ்சுப்பிள்ளைகள் மீது நிகழ்த்தி வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெளிவந்திருக்கும் செய்திகள் பேரதிர்ச்சி தருகின்றன. அப்பள்ளிக் கூடத்தில் படித்த மாணவிகள் அங்கு நடந்த கொடூரங்களை விளக்கும் குரல் பதிவுகளும், கேள்வியுறும் செய்திகளும் ஈரக்குலையைக் கொதிக்கச் செய்திருக்கின்றன.

 

பள்ளி எனும் கல்விக்கட்டமைப்புக்கு அனுமதிபெற்று, எவ்வித விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படாது ஆன்மீகத்தின் பெயரைச்சொல்லி, தன்னை கடவுளாக உருவகப்படுத்திக் கொண்டு கல்வி பயில வரும் ஆயிரக்கணக்கான பெண் பிள்ளைகளை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கியும், இதற்கெதிராகக் குரல் கொடுக்க முயல்வோர் மீது அடக்குமுறையை ஏவியும் ஒடுக்குவதுமெனப் பல ஆண்டுகளாகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பாபா சிவசங்கர் போன்றவர்கள் கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்களாவர்.

 

‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ எனும் ஆணாதிக்க ஒடுக்குமுறைகளைத் தகர்த்து, சமூகத்தில் தலைதூக்கவும், மேலெழுந்து உயரவும் உதவும் ஒற்றைப்பேராயுதம் கல்வியே என்பதையுணர்ந்து, பள்ளிக்கூடத்திற்கு வரும் பிஞ்சுப்பிள்ளைகளை ஆன்மீகத்தின் பெயரால் தங்களது பாலியல் இச்சைகளுக்கு இரையாக்கிய சிவசங்கர் பாபா நிகழ்த்திய கொடுமைகளும், அத்துமீறல்களும் வெளியே வராது மூடி மறைக்கப்பட்டிருப்பது தற்செயலானதல்ல. சாட்டை, நக்கீரன் போன்ற வலையொலிகளும், பாலிமர் தொலைக்காட்சியும் தவிர்த்து வேறு எந்த ஊடகமும் இதனைப் பேசப்படுப்பொருளாக மாற்றாததும், அதுதொடர்பான செய்திகளை வெளிக்கொணராததும் ஏனென்று புரியவில்லை.

 

ஆளும் வர்க்கத்தின் ஒத்துழைப்பில்லாது இத்தகைய கொடுஞ்செயல்களைச் சிவசங்கர் பாபா அரங்கேற்றியிருக்க முடியுமா? எனும் இயல்பான ஐயம் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. ஆயிரக்கணக்கான பெண்களைப் பலிகொண்ட சமகாலத்தில் நடந்தேறிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல இச்சம்பவத்திற்குப் பின்னாலும் பெரும் வலைப்பின்னலும், ஆட்சியாளர்களின் தொடர்பும் இருக்கும் எனும் வாததத்தைப் புறந்தள்ளுவதற்கில்லை. பணபலமும், அரசியல் செல்வாக்கும், அதிகாரப்பின்புலமும், சமூக அங்கீகாரமும் இருக்கும் மமதையில், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் மிதப்பிலும், மனப்போக்கிலும் மனிதத்தன்மையற்று பிஞ்சுப்பிள்ளைகளைச் சிதைத்திட்ட சிவசங்கர் பாபா போன்றவர்கள் சமூகத்தின் சாபக்கேடு.

 

பள்ளி எனும் கல்விக்கூடத்தின் பெயரால் அதிகார மையங்களை அமைத்து, அதன்மூலம் தங்களது உடற்பசிக்குப் பிஞ்சுகளைக் குதறும் கயவர்களை எவ்விதப் பாரபட்சமுமில்லாது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், தண்டிக்கவும், கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டியது பேரவசியமாகிறது. சமூகத்தின் மேல்தட்டிலிருக்கும் மனநிலையில் கொஞ்சம்கூட ஈவு இரக்கமற்று அப்பாவிப்பெண் குழந்தைகளைப் பலிகடாக்கிய சிவசங்கர் பாபா இச்சமூகத்தில் இன்னும் சுதந்திரமாக வாழ்வது வெட்கித் தலைகுனியச் செய்கிறது.

 

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து, பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அதனை வெளிக்கொணரும் வேளையிலும் அப்பள்ளி மீதும், சிவசங்கர் பாபா மீதும் நடவடிக்கை எடுக்காது தமிழக அரசு மெத்தனப்போக்கோடு இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இவ்விவகாரத்தில், தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஒப்புக்குப் பள்ளிக்குச் சென்று விசாரணை எனும் பெயரில் பார்வையிட்டதைத் தவிர எவ்வித முன்நகர்வும் இல்லாதது பெரும் ஏமாற்றமாகும். பெண் பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையுமில்லை என்று வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கிறது. சிவசங்கர் பாபா மீதும், அப்பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ஏன் தயங்குகிறது என்பது இதுவரை புரியவில்லை.

 

ஆகவே, இனிமேலாவது முனைப்போடு செயல்பட்டு, பள்ளிக்கூடம் நடத்துவதாகக் கூறிக்கொண்டு, பாலியல் முறைகேடுகளையும், வன்கொடுமைகளையும் பல ஆண்டுகளாகச் செய்து ஆயிரக்கணக்கான பெண் பிள்ளைகளைச் சிதைத்திட்ட சிவசங்கர் பாபா மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உடனடியாகச் சிறைப்படுத்த வேண்டுமெனவும், சுஷில்ஹரி சர்வதேசப் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.