Skip to main content

நூதன முறையில் பெண்ணை ஏமாற்றி, தங்க நகையை பறித்த மர்ம மனிதன்...! 

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

Mysterious man who cheated on a woman in a modern way and stole gold jewelry ...!

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது கொணக்கம் பட்டு. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி செல்வி வயது 48. இவர் நேற்று (15.02.2021) மதியம் மகள் தீபாவுடன் வீட்டில் சமையல் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்து அவர்களின் வீட்டு முன்பு இறங்கிய 25 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், பார்ப்பதற்குப் பக்திமான் போன்று தோற்றம் தொடுத்துள்ளார். அவர் உங்கள் வீட்டில் யாரோ செய்வினை செய்திருக்கிறார்கள், அதனால் உங்கள் குடும்பத்தில் நிம்மதியற்று பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

 

அதனால் அந்த செய்வினை எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் உங்கள் இல்லத்தில் கெட்ட காரியம் நடைபெறும். இப்படிக் கூறி அந்தப் பெண்ணின் மனதைக் குழப்பியுள்ளார். அதோடு அதையெல்லாம் சரி செய்ய இந்த வீட்டில் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண் நம்பும் விதத்தில் பல்வேறு காரணங்களையும் அடுக்கடுக்காகக் கூறியுள்ளார். அதை நம்பிய செல்வி, என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று அந்த மர்ம மனிதரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர் வீட்டில் இருக்கும் தங்க நகைகளைக் கொடுத்தால் அதை வைத்துப் பரிகாரம் செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.

 

அதை மீண்டும் வீட்டில் வைத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த செல்வியின் மகள்  20 வயது தீபா, தன் தாயாரிடம் இதையெல்லாம் நம்ப வேண்டாம் என்று கூறி தடுத்துள்ளார். தனது மகள் பேச்சையும் மீறி செல்வி அந்த  மர்ம மனிதரிடம் வீட்டில் பீரோவில் வைத்திருந்த  மோதிரம், 4 பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை எடுத்துவந்து கொடுத்துள்ளார். அதைக் கையில் வாங்கிய அந்த நபர், நான் இதை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் உள்ள கோயிலில் வைத்து பரிகாரம் செய்துவிட்டு, மீண்டும் எடுத்து வந்து தருகிறேன் என்றார். அதற்குள் உங்கள் வீடு வாசலைக் கழுவி சுத்தம் செய்து நீங்களும் குளித்துவிட்டுத் தயாராக இருங்கள் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

 

அப்படி சென்ற மனிதன் பல மணி நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த செல்வி, ஊரில் உள்ள கோயிலுக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு யாரும் இல்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வி இது சம்பந்தமாக ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் பில்லி, சூனியம் எடுக்கப் பரிகாரம் செய்யப் போவதாகக் கூறி நூதன முறையில் நகைகளைப் பெற்றுச் சென்ற அந்த மர்ம நபர் யாராக இருக்கும் என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். பில்லி, சூனியம், ஏவல், அதற்கான பரிகாரம் என்று கூறி மர்ம நபர் ஒருவர் பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.