My full attention is on the Women's Rights Scheme Chief Minister M.K.Stalin

Advertisment

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 வெற்றியாளர்களைச் சந்தித்து வாழ்த்துகளைத்தெரிவித்து சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.அப்போது தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்தியாவின் மிகுந்த பெருமைக்குரிய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள உங்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களது தந்தையின் இடத்தில் இருந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அகில இந்திய போட்டித் தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றது என்பது, உங்களது கடினமான உழைப்பையும், கூர்மையான அறிவையும், விடாமுயற்சியையும் எடுத்துக் காட்டுகிறது. சாதாரணமாக, யாருக்கும் இந்த வெற்றி கிடைத்து விடாது என்பதை என்னைவிட நீங்கள் நன்றாக அறிவீர்கள். லட்சக்கணக்கானவர்கள் தேர்வில் பங்கேற்றாலும், சிலரால் மட்டுமே வெற்றி பெற முடியும். அந்த விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரில் நீங்களும் ஒருவர் என்பதுதான் உங்களது முக்கியத்துவம். உங்களது முகங்களைப் பார்க்கும் போது, கிராமப்புற முகங்களும் தென்படுகிறது. உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியாகவும் நீங்கள் இருக்கலாம். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.

உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது, இந்த இடத்துக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் பணிகள் என்பது உயர்ந்த அரசுப் பணிகள் என்பதைத்தாண்டி, அதற்கென ஒரு தனி பொறுப்பும் கடமையும் உள்ள பதவிகள் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எப்போதுமே உயர்ந்த பதவி என்பது அதை விட பன்மடங்கு கடமையையும் பொறுப்பையும் உள்ளடக்கியது என்பதுதான் உண்மை. இந்த நாட்டின் எளிய மக்கள், குறிப்பாக கிராமப் பகுதி மக்களின் வாழ்வானது, அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களினால்தான் மேம்பட வேண்டும். இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமான நாட்டில் இது மிக மிக முக்கியமானது. அதற்கு அரசு திட்டங்கள் முறையாக, அவர்களைச் சென்று அடைய வேண்டும். அது நடைபெற வேண்டும் என்றால், நாளைய தினம் முக்கிய பொறுப்புகளில் அமரப் போகும் உங்களைப் போன்ற சிறந்த அலுவலர்கள் திட்டங்களைக் கண்காணித்து செயல்படுத்திட வேண்டும்.

Advertisment

தமிழ்நாட்டில், மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்த இருக்கிறோம். உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில், தரவரிசைப்படுத்தப்பட்ட 146 நாடுகளில், இந்தியா 127 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதுமிகவும் கவலைக்குரிய செய்தியாகும். இதனை நீக்குவதற்கான முயற்சியாகவும், இந்தத் திட்டத்தை திட்டமிட்டுள்ளோம்.தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்த முதலமைச்சர் கலைஞர் பெயர் அந்த திட்டத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. அவர் தான், பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உண்டு என்று 1989 ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தவர். இப்படி ஒரு திட்டத்தில் ஒரு கோடி மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தர இருக்கிறோம். மகளிருக்கு பொருளாதார வலிமை ஏற்படுத்தும் திட்டமாக இதனை வடிவமைத்துள்ளோம்.

My full attention is on the Women's Rights Scheme Chief Minister M.K.Stalin

யாருக்கெல்லாம் இது கிடைக்கும் என்று கேட்டபோது, ‘யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் அவசியத் தேவையோ அவர்களுக்கெல்லாம் கிடைக்கும்' என்று நான் சொன்னேன். திட்டத்தை இப்போதே அறிவித்துவிட்டோம். செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தான் வழங்கப் போகிறோம். இதற்கிடையே வருகின்ற அனைத்து ஆலோசனைகளையும் ஏற்று எந்த சிக்கலும் இல்லாமல் அதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். என்னுடைய முழு கவனம் என்பது இதில் தான் இப்போது இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தைக் கூட்டி, அவர்களிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்துள்ளேன். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மிகுந்த ஆர்வத்தோடு இதில் இறங்கிவிட்டார்கள். ஏனென்றால், ஒவ்வொரு மாவட்ட மக்களும் இதில் பயனடைய இருக்கிறார்கள். இத்தகைய துடிப்பும், ஆர்வமும் கொண்டவர்களாக நீங்களும் நீங்கள் பணியாற்றும் இடங்களில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களை நாடி வரும் ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. மக்களிடம் கனிவாகப் பழகுங்கள். அவர்கள் தான் நமக்கு உண்மையான மேலதிகாரிகள். அவர்களிடம்தான் நீங்கள் முதலில் நற்பெயர் எடுக்க வேண்டும்.

Advertisment

இதை நீங்கள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். நிறைய படித்து, இந்த பதவியை கைப்பற்றி இருக்கிறீர்கள். இதோடு போதும் என்று படிப்பை நிறுத்தி விடாதீர்கள். இந்த சமூகத்தைப் பற்றிப் படியுங்கள். அதுதான் உங்களை மிகச் சரியாக வழி நடத்தும். உங்களது பயிற்சி காலத்தில், சட்ட விதிகள். நடைமுறைகள், அரசுத் திட்டங்கள், அவற்றிற்கான விதிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி எல்லாம் முழுமையாகத்தெரிந்து கொள்ளுங்கள். அதனை எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் விட்டுத் தராமல் செயல்படுங்கள். சட்டம் என்ன சொல்கிறது என்றும் பாருங்கள். உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறது என்பதையும் பாருங்கள். அதன்பிறகு செயல்படுங்கள். அகில இந்திய தேர்வினைச் சிறப்பாக எதிர்கொண்ட நீங்கள், அடுத்து வரும் உங்களது பயிற்சிக் காலத்தையும் மிகச் சிறப்பாக நிறைவு செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். பல்வேறு பணிகளில் பிற்காலங்களில் பொறுப்பேற்கப் போகும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். உங்கள் பணிகளால் நமது தமிழ்நாடும்உங்கள் குடும்பமும் பெருமைப்பட வேண்டும்” எனத்தெரிவித்தார்.