Skip to main content

’போட்ரு குமாரு’ ! திட்டம் தீட்டிய மனைவி..! தீர்த்துக்கட்டிய சிறுவர்கள்! - தேமுதிக பிரமுகர் கொலையில் திடுக் தகவல்கள்!

Published on 24/08/2018 | Edited on 27/08/2018


சேலம் அருகே தேமுதிக பிரமுகரை மனைவியும் கள்ளக்காதலனும் திட்டமிட்டு, சிறுவர்களை வைத்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (42). அடிப்படையில் விவசாயி. சொந்தமாக டாடா ஏஸ் சரக்கு வாகனமும் ஓட்டி வந்தார். தேமுதிக கட்சியில் சில ஆண்டுகள் கிளைச்செயலாளராகவும் இருந்தார். இவருடைய மனைவி ஆலயமணி (32). இவர்களுக்கு 17 மற்றும் 15 வயதுகளில் இரண்டு மகன்கள்.

ஆலயமணி தன் மகன்களுடன் ஒருமுறை திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறியதன்பேரில், கடந்த 17ம் தேதி இரவு 10 மணியளவில் வாடகை காரில் ஏற்றிவிட்டு, கலியமூர்த்தி வழியனுப்பி வைத்தார். இரவு 10.45 மணியளவில் வீட்டுக்கு வந்து படுத்த கலியமூர்த்தி, மறுநாள் காலையில் எழுந்திருக்கவில்லை.
 

கலியமூர்த்தி
           கலியமூர்த்தி


கலியமூர்த்தி வைத்திருக்கும் கறவை மாட்டில் பால் கறக்க தினமும் காலையில் அவருடைய சித்தப்பா மனைவி காங்கம்மாள் அங்கு வருவது வழக்கம். ஆகஸ்ட் 18ம் தேதி காலை 6 மணியளவில் காங்கம்மாள், கலியமூர்த்தியை எழுப்புவதற்காக செல்கிறார். அங்கே வீட்டுக்குள் வாசல்படி அருகே தலைகுப்புற நிர்வாண நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார் கலியமூர்த்தி.

அதிர்ச்சியில் உறைந்த காங்கம்மாள் கணவர் கோவிந்தன், அவருடைய தம்பி வெள்ளையன் ஆகியோரிடமும் கூற அலறியடித்தபடி ஓடி வந்து பார்த்தனர். வீட்டுக்குள் நுழைந்ததும் இடப்பக்கம் நிறுத்தப்பட்டிருந்த பிரிட்ஜ் மீதும், கதவு நிலைப்படி அருகிலும் ரத்தம் தோய்ந்து இருந்தது.

அன்று காலை 8.30 மணிக்கெல்லாம் ஆத்தூர் டிஎஸ்பி பொன்கார்த்திக்குமார், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ததில், மொத்தம் 34 இடங்களில் கத்தியால் கொத்துக்கறிபோல வெட்டியிருப்பது தெரிய வந்தது. பல இடங்களில் 4 அங்குலம் ஆழத்திற்கு கத்தி இறங்கியிருந்தது. பின்பக்க கழுத்து, முதுகு, தலை, மார்பு என பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன.

கலியமூர்த்தி வட்டித்தொழிலும் செய்து வந்தார். பணம் வைத்து சீட்டாட்டம் ஆடும் பழக்கமும் உண்டு. அதனால் கொடுக்கல் வாங்கல் ரீதியாகவோ அரசியல் பழிவாங்கல் ரீதியாகவோ இந்த கொலை நடந்திருக்குமோ என்றுகூட காவல்துறையினர் விசாரித்தனர். ஆனால், கலியமூர்த்தி சற்று கணத்த உடலுடன் இருந்தாலும் யாரிடமும் அதிர்ந்துகூட பேசியதில்லை என்று ஒட்டுமொத்த ஊர்க்காரர்களும் சொன்னதோடு, மனைவி ஆலயமணியின் நடத்தை பற்றியும் சில தகவல்களை சொல்லியுள்ளனர்.

ஆலயமணி யார் யாரிடம் பேசினார் என்ற செல்போன் விவரங்களை சேகரித்தபோது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேரைச் சேர்ந்த குமார் என்கிற தேன்குமார் என்பவருடன் தினமும் மணிக்கணக்கில் பேசியிருப்பதை போலீசார் மோப்பம் பிடித்தனர். கலியமூர்த்தி கொலை செய்யப்பட்டபோதும் ஆலயமணிக்கு குறிப்பிட்ட சில எண்களில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் சென்றுள்ளன.

அவரை அழைத்து வழக்கமான 'உபசரிப்புகளுடன்' விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு ஆலயமணி சென்றபோது, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த டிராவல்ஸ் வேன் டிரைவர் தேன்குமாருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
 

ஆலயமணி
            ஆலயமணி


அந்த வேனில்தான் ஆலயமணியும், மகளிர் குழுக்களைச் சேர்ந்த சிலரும் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது ஆலயமணியின் பர்ஸ் தொலைந்து போனதால், உடனடியாக டிரைவர் தேன்குமார்தான் கைச்செலவுக்காக அவருக்கு தன் பாக்கெட்டில் இருந்து 2 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து உதவியுள்ளார்.

இப்படி ஆரம்பித்த பழக்கம்தான் தேன்குமாருக்கு ஆலயமணி தன்னையே கொடுக்கும் அளவுக்கு சென்றது. தேன்குமாரும் காதல் திருமணம் செய்தவர்தான். மனைவி ஊரில் இல்லாதபோது ஆலயமணியை தன் வீட்டுக்கே வரவழைத்து பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். அதேபோல், அர்த்த ராத்திரி நேரத்தில்கூட தேன்குமாரை தன் தோட்டத்து வீட்டுக்கு வரவழைத்து பலமுறை ஆலயமணி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

தேன்குமாருக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஆலயமணி மகளிர் சுய உதவிக்குழு மூலமாக வங்கியில் இருந்து கடன் பெற்றும், தன் நகைகளை கழற்றிக்கொடுத்தும் உதவியிருக்கிறார். ஒருகட்டத்தில், கலியமூர்த்திக்கு மனைவியின் கள்ளத்தொடர்பு விவகாரம் தெரிந்துவிட்டது என்றும், ஆனாலும் குழந்தைகளின் நலன் கருதி அதை கண்டும்காணாமல் இருந்து விட்டதாகவும் சொல்கின்றனர்.
 

தேன்குமார்
                     தேன்குமார்


என்றாலும், தேன்குமாருடன் 'தொடர்பு' ஏற்பட்ட இந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆலயமணி, கணவர் அழைத்தாலும் 'நெருக்கமாக' இருந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தேன்குமார், 'என் வீட்டில் எனக்கு என் பொண்டாட்டி மரியாதையே கொடுக்க மாட்டேன்கிறா. போடா வாடானுதான் பேசறா. உன்னோடு வாழ்வதுதான் பிடித்திருக்கிறது. கடைசி வரை உன்னை காப்பாற்றுவேன்,' என்று ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார்.

இதை ஆலயமணியும் உள்ளூர விரும்பி இருக்கிறார். அதனால்தான் தேன்குமார் அவ்வாறு சொன்னவுடன், ''இவன் (கலியமூர்த்தி) உசுரோட இருக்கற வரைக்கும் நம்மளால நிம்மதியாக இருக்க முடியாது. எத்தனை நாளைக்குதான் பயந்து பயந்து சந்திக்கறது... பேசாமல் அவனை போட்டுரு குமாரு...,'' என்று யோசனை கொடுத்ததாகச் சொல்கின்றனர் தலைவாசல் போலீசார்.

இதன்பிறகுதான் கலியமூர்த்தியை போட்டுத்தள்ள தேன்குமார் திட்டம் தீட்டுகிறார். பள்ளிப்படிப்பைக்கூட தாண்டாத தேன்குமார், கொலையும் நடக்க வேண்டும்; அதேநேரத்தில் தானும் அதில் நேரடியாக சம்பந்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்திருப்பதை பார்த்து போலீசாரே திகைப்பாக கூறுகின்றனர்.

கலியமூர்த்தியை காலி பண்ண வேண்டுமானால் சிறுவர்களை வைத்துதான் காரியத்தை முடிக்க வேண்டும் என்று முன்பே திட்டமிட்டுள்ளார். சிறுவர்களுக்கு பெரிய அளவில் தண்டனை கிடைக்காது என்பதோடு சீக்கிரம் விடுதலை ஆகிவிடுவார்கள் என்பதால் இப்படி திட்டமிட்டுள்ளார். இதற்காக கள்ளக்குறிச்சி ஏமப்பேரைச் சேர்ந்த சூர்யா, ஹரிகிருஷ்ணன் (19) ஆகியோரை இதற்காக ஒப்பந்தம் செய்கிறார். கொலைக்கு அவர்களும் புதியவர்கள்தான்.

கடந்த ஜூலை மாதம் புத்தூரில் தேர்த்திருவிழா நடந்தது. அப்போதே அவர்கள் கலியமூர்த்தி தீர்த்துக்கட்ட இரவு நேரத்தில் கத்தியுடன் வீட்டுக்கு வந்துள்ளனர். ஆனால் நாய் குரைத்து காட்டிக்கொடுத்ததால் திடுக்கிட்டு எழுந்த கலியமூர்த்தி திருடன் திருடன் என கூச்சல்போடவும் அவர்கள் தலைதெறிக்க தப்பி ஓடிவிட்டனர். இல்லாவிட்டால் அன்றைக்கே கலியமூர்த்தியின் கதை முடிந்திருக்கும்.

கொலை நடந்த இடத்தில் நாமும் நேரில் பார்வையிட்டோம். அங்கே இருந்த கலியமூர்த்தியின் சித்தப்பாக்கள் கோவிந்தன், வெள்ளையன் ஆகியோரிடமும் பேசினோம். அவர்களும் கலியமூர்த்தி வீட்டுக்குள் ஒரு மாதத்திற்கு முன்பு திருடர்கள் வந்ததை ஒப்புக்கொண்டனர். ஆனால், இந்தக் கொலைக்கான முதல் முயற்சிதான் அது என்பது அப்போது இவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

இதற்கிடையே சூர்யா என்ற சிறுவன் இடையில் கழன்றுகொள்ளவே, அவனுக்குப் பதிலாக ஏமப்பேரைச் சேர்ந்த ஆதிகேசவன் என்ற பதினாறு வயது சிறுவனை தன்னுடைய கொலை திட்டத்திற்கு அழைத்தார் தேன்குமார். இதற்காக ஒரு மாதமாக ஆதிகேசவனுக்கும், ஹரிகிருஷ்ணனுக்கும் மதுபானங்களை வாங்கிக் கொடுத்து போதையிலேயே வைத்திருந்திருக்கிறார். போதாதற்கு கஞ்சா போதைக்கும் பழக்கப்படுத்தி இருந்தார் தேன்குமார்.
 

ஹரிகிருஷ்ணன்
                 ஹரிகிருஷ்ணன்


சிறுவன் ஆதிகேசவனுக்கு பெரிய தேவை ஏதும் இல்லை. மதுவும், கஞ்சாவும் போதுமானதாக இருந்திருக்கிறது. ஆனால் ஐடிஐ படித்துள்ள ஹரிகிருஷ்ணன் மட்டும் கலியமூர்த்தியை தீர்த்துக்கட்டினால் என்ன தருவீர்கள் என தேன்குமாரிடம் டீல் பேசியிருக்கிறான். அதற்கு தேன்குமார், 'கலியமூர்த்தியை தீர்த்துக்கட்டினால் அவனுடைய மனைவி ஆலயமணியையும், சொத்துகளையும் நான் சொந்தமாக்கிக் கொள்வேன். கலியமூர்த்தி வைத்திருந்த டாடா ஏஸ் வாகனத்தை உனக்குத் தந்து விடுகிறேன்,' என்று உறுதி கொடுத்திருக்கிறான்.

இதன் பிறகுதான் கலியமூர்த்தியை ஆகஸ்ட் 17, 2018ம் தேதி இரவு தீர்த்துக்கட்டுவது என்று நாள் குறித்தனர். ஆதிகேசவனும், ஹரிகிருஷ்ணனும் நயன்தாரா ரசிகர்களாம். அன்றைக்கு அவர் நடித்த, 'கோலமாவு கோகிலா' படம் வெளியாவதால் அதை பார்த்துவிட்டு காரியத்தை முடித்துவிடலாம் என்று சொன்னதால் அந்த தேதியை முடிவு செய்திருக்கிறார்கள்.

ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டப்படி, ஆலயமணி தன் மகன்களை அழைத்துக்கொண்டு ஆகஸ்ட் 17ம் தேதி இரவு திருநள்ளாறுக்குச் சென்றுவிட்டார். அடுத்த சில மணி நேரங்களில் தனக்கு ஏற்படப்போகும் விபரீதத்தை சற்றும் அறியாத கலியமூர்த்தி மனைவியையும், மகன்களையும் காரில் வழியனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பினார்.

சம்பவத்தன்று மாலையில் சின்னசேலத்தில் ஒரு தியேட்டரில் தேன்குமார், சிறுவன் ஆதிகேசவன், ஹரிகிருஷ்ணன் மூவரும் கோலமாவு கோகிலா படம் பார்த்தனர். படம் முடிந்து இரவு மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தலைவாசல் நோக்கி வருகின்றனர். வரும் வழியில் அம்மைஅகரத்தில் மூவரும் மது மற்றும் கஞ்சா ஏற்றிக்கொண்டனர். பின்னர் மேல்நாரியப்பனூரில் உள்ள பிரபல சர்ச் வளாகத்தில் நுழையும் அவர்கள் அங்கேயும் மது அருந்திவிட்டு, தூங்கியுள்ளனர்.

அதிகாலை 2.30 மணியளவில் அவர்களை எழுப்பிய தேன்குமார் தானே வண்டி ஓட்ட, இருவரும் பின்னால் அமர்ந்து தலைவாசல் புத்தூர் நோக்கி வந்தனர்.

வழக்கமாக வெளியே வீட்டு வாசலில் கட்டிலில் படுத்திருக்கும் கலியமூர்த்தி, அன்று இரவு வீட்டுக்குள் கட்டிலில் தூங்கினார். கதவு லேசாக திறந்தே இருந்தது. ஆகஸ்ட் 18ம் தேதி. அதிகாலை 3 மணிக்கு கலியமூர்த்தி வீட்டுக்கு மூன்று பேரும் வந்து சேர்ந்தனர். தேன்குமார் மிகத்தந்திரமாக காவல்காப்பதாக கூறிவிட்டு வீட்டுக்கு வெளியிலேயே நின்று கொண்டார். ஆதிகேசவனும், ஹரிகிருஷ்ணனும் உள்ளே நுழைந்ததும் வீட்டுக்குள் எரிந்து கொண்டிருந்த பல்பை கழற்றிவிட்டனர்.

கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கலியமூர்த்தியை தலையணையால் ஆதிகேசவன் அமுக்க, திமிறியபடி கலியமூர்த்தி புரள, பின்பக்க கழுத்து, தலை, முதுகு என 14க்கும் மேற்பட்ட இடங்களில் தன்னுடைய கத்தியால் குத்தியுள்ளார் ஹரிகிருஷ்ணன். அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில் கலியமூர்த்தி வெளியே ஓடிவர முயற்சிக்க ஆதிகேசவன் காலை வாறிவிட கதவருகே குப்புற விழுந்தார் கலியமூர்த்தி. முன்பக்க கழுத்து, முகம், மார்பு என இருவரும் கண்முன் தெரியாமல் குத்திக் கொன்றனர். மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் கத்திக்குத்து விழுந்ததால் ரத்தம் பீறிட்டது. கதவருகே இருந்த ஃபிரிட்ஜ், சுவர்களில் எல்லாம் ரத்தம் தெறித்துக் கிடந்தது.

அடிக்கடி தேன்குமார் ஆலயமணி வீட்டுக்குச் சென்று இருந்ததால் அவரைப் பார்த்து நாய் குரைக்கவில்லை. மற்றவர்கள் மீது பாய்ந்து விடாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக பிஸ்கெட்டுகளை வாங்கிச் சென்று இருந்தனர். அதனால் இந்த முறை நாய் குரைக்கவே இல்லை.

''கம்ப்ரஸர் ஓடிக்கொண்டு இருந்ததால் எங்களுக்கு என்ன நடந்தது என்று கொஞ்சம்கூட சத்தம் கேட்கவில்லை. ஆனாலும், சம்பவ இடத்துக்கு பக்கத்திலயே வீடு இருந்தும் எப்படி சத்தம் கேட்காமல் இருக்கும்? என்று போலீசார் எங்களை அடித்துக் கேட்கின்றனர். கலியமூர்த்தி கொலை பற்றி நாங்கள்தான் தகவல் கொடுத்தோம். கொலையாளிகளை பிடிக்க எங்களுக்கு மட்டும் விருப்பம் இல்லாமல் போகுமா?,'' என்கிறார் கலியமூர்த்தியின் சித்தப்பாக்களான வெள்ளையனும், கோவிந்தனும்.

தலையணையால் கலியமூர்த்தியை அமுக்கி இருந்தபோது ஹரிகிருஷ்ணன் குத்தியதில் ஒரு குத்து ஆதிகேசவனின் கையிலும் இறங்கியுள்ளது. காரியத்தை கச்சிமாக முடித்துவிட்டு வீட்டு பின்பக்கமாக தப்பிச்செல்லும்போது ஆதிகேசவனின் ரத்தம் வழியெங்கும் சொட்டு சொட்டாக சிதறி இருந்தது.

ஏமப்பேருக்குத் தப்பிச்சென்ற அவர்கள் அங்குள்ள ஏரியில் அமர்ந்து மீண்டும் மது குடித்துள்ளனர். ரத்தம் தோய்ந்து இருந்த சட்டையை இருவரும் கழற்றி தீயிட்டு எரித்துள்ளனர். கொலைக்குப் பயன்படுத்திய ஒரு கத்தியை அந்த ஏரியில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். தேன்குமார் பயன்படுத்திய கத்தி மீட்கப்படவில்லை.

ஆகஸ்ட் 18ம் தேதி காலையில் இந்த கொலை குறித்து தலைவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் 6.30 மணியளவில் சம்பவ இடம் விரைந்தனர். அப்போது வரை ரத்தம் உறையாமல் அப்படியே இருந்தது.

சம்பவ இடத்தில் இருந்து சில தடயங்களை சேகரித்த போலீசார், ஃபாரன்ஸிக் லேப் டெஸ்டுக்காக ரத்தம் தோய்ந்த சிமெண்ட் காரையையும் கொஞ்சம் பெயர்த்து எடுத்துக் கொண்டனர். பிரேத பரிசோதனையில் கலியமூர்த்தியின் உடலில் மொத்தம் 34 இடங்களில் கத்திக்குத்து இருந்ததும், பல இடங்களில் 4 அங்குல ஆழம் வரை கத்திக்குத்து இறங்கியிருப்பதும் தெரிய வந்தது.

ஆத்தூர் டிஎஸ்பி பொன்கார்த்திக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் குமரவேல்பாண்டியன், கேசவன் (ஆத்தூர் டவுன்), சரவணன் (ஆத்தூர் ஊரகம்) ஆகியோல் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகத்தின்பேரில் கலியமூர்த்தியின் மனைவி ஆலயமணியை அழைத்து விசாரித்ததில் கொலையில் அவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்தது.

அதன்பின், கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஒன்றுமே தெரியாதவர்கள் போல சுற்றிக்கொண்டிருந்த ஆதிகேசவனையும், ஹரிகிருஷ்ணனையும் தூக்கிய போலீசார் முழு விசாரணையையும் பதிவு செய்தனர். கொலையை கச்சிதமாக முடித்ததற்காக ஆதிகேசவனுக்கு மட்டும் தேன்குமார் 500 ரூபாய் கொடுத்துள்ளார். தேன்குமார் மட்டும் போலீசில் சிக்காமல் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் 21ம் தேதி சரணடைந்தார்.

சிறுவன் ஆதிகேசவன் கடந்த 20ம் தேதி சேலம் சிறுவர் காப்பகத்தில் அடைக்கப்பட்டான். ஹரிகிருஷ்ணன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். தேன்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் சுட்டுக் கொலை!

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Pathankot incident mastermind person passed away

 

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு முதன்மை பயங்கரவாதியாகச் செயல்பட்ட ஜெய்ஷ்- ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாஹித் லதீஃப் இன்று பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 

 

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் பகுதியில் இந்திய விமானப் படைத் தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் விமானப் படைத்தளத்தில் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அங்கு வந்த இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த கொடூர தாக்குதலை ஜெய்ஷ் - ஏ - முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த அமைப்பில் உள்ள ஷாஹித் லதீஃப் என்பவர் தான் இந்த தாக்குதலுக்கு முதன்மையாகச் செயல்பட்டவர் என்பதும் தெரியவந்தது. ஷாஹித் லதீஃப் கடந்த 1994 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். இவர் மீது இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

 

இந்நிலையில் தான், பாகிஸ்தானின் சியோல்கோட்டில் பயங்கரவாதி ஷாஹித் லதீஃப் இன்று அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து உள்நாட்டுச் செய்திகளில், பயங்கரவாதி ஷாஹித் லதீஃப்பை சுட்டுக் கொன்றவர்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

 

 

Next Story

மருத்துவமனையில் கொடூரம்; இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

 young girl incident at Hospital

 

திருப்பூர் மாவட்டம், அவினாசி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகள் சத்தியஸ்ரீ (21). இவர் திருப்பூர் 60 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவரும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் (21) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், சத்தியஸ்ரீ வழக்கம்போல் தான் பணியாற்றி வந்த மருத்துவமனைக்கு வந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நரேந்திரன், சத்தியஸ்ரீயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிப்போகவே ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சத்தியஸ்ரீயின் வயிற்றில் குத்தியுள்ளார். மேலும், அவர் சத்தியஸ்ரீயின் கழுத்தையும் அறுத்துள்ளார். இதில் சத்தியஸ்ரீ படுகாயமடைந்து மயங்கிய நிலையில் கீழே விழுந்துள்ளார். அதன் பின்னர், நரேந்திரன் அந்த கத்தியை வைத்து தன்னுடைய கழுத்தையும் அறுத்துக்கொண்டு  தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது.

 

இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த அந்த தகவலின் பேரில் திருப்பூர் வடக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சத்தியஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். மேலும், நரேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், சத்தியஸ்ரீக்கும், நரேந்திரனுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பேச்சு வார்த்தை நடத்துவதற்காக நரேந்திரன், சத்தியஸ்ரீ பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு, தான் வைத்திருந்த கத்தியை வைத்து சத்தியஸ்ரீயை குத்தி விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது.