
முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் நான்கு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டப்பட்டு உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் மணல் கடத்தல் அல்லது மணல் அள்ள அனுமதி அளிப்பது தொடர்பாக இச்சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த கொலையில் தொடர்புடையவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ‘தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் கும்பலால் கொடூரமாக கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் கடத்தல் நடப்பது தொடர்பாக தொடர்ச்சியாக விஏஓ புகார் அளித்துள்ளார். அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. கடந்த மாதம் 13 ஆம் தேதியே காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என மனு அளித்துள்ளார். பணியிட மாறுதல் வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் மணல் கடத்தல் கும்பலிடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரே இந்த கொலை வழக்கை விசாரித்தால் இதில் உண்மை வெளிவராது. ஆகவே இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து என முடிவு செய்வதற்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என வாதிக்கப்பட்டது. அதே நேரம் அரசு தரப்பில் வழக்கு விசாரணை முறையாக சென்று கொண்டிருக்கிறது என நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து நீதிபதிகள் 'இந்த சம்பவம் ஒரு துரதிஷ்டமான நிகழ்வு. இது ஒட்டுமொத்த மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. தாக்கல் செய்த நிலை அறிக்கையின்படி தென் மண்டல காவல்துறை தலைவர் கண்காணிப்பின் கீழ் தூத்துக்குடி துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கை இன்றிலிருந்து ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். விசாரணை அதிகாரி நான்கு வாரத்தில் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததிலிருந்து மூன்று வாரத்திற்குள் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு வழக்கை மாற்றி தினந்தோறும் விசாரணை என்ற அடிப்படையில் இரண்டு மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.